இந்தியாவின் மிகப்பெரிய தனியார் வங்கி ஒன்று, மகாராஷ்டிர மாநில சாலை மேம்பாட்டுக் கழகத்திற்கு வழங்கிய ரூ.45 கோடி கூடுதல் வட்டியை விளம்பரச் செலவு போல போலிக் கணக்கு காட்டி மறைக்க முயன்றதாகப் புகார் எழுந்துள்ளது.

இது தொடர்பான உள்விசாரணை உத்தரவு வெளியான சில நாட்களிலேயே, வங்கியின் முன்னாள் தலைவர் அடானு சக்ரவர்த்தி தனது பதவியை திடீரென ராஜினாமா செய்தார்.

இந்த விவகாரம் குறித்துப் பிரபல வர்த்தகர் பி.ஆர்.சுந்தர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டதைத் தொடர்ந்து, முதலீட்டாளர்கள் மத்தியில் வங்கியின் நம்பகத்தன்மை குறித்த பெரும் கவலை ஏற்பட்டுள்ளது.

இந்த முறைகேடு தகவல் வெளியான உடனே பங்குச் சந்தையில் ஹெச்டிஎப்சி வங்கியின் பங்குகள் 2.45 சதவீதம் வரை சரிந்து, ஒரே நாளில் முதலீட்டாளர்களுக்கு ரூ.24,000 கோடிக்கும் அதிகமான சந்தை மதிப்பு இழப்பு ஏற்பட்டுள்ளது.

இதற்கிடையே, முழுமையற்ற தகவல்களின் அடிப்படையில் வங்கி மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளை வன்மையாக மறுப்பதாக ஹெச்டிஎப்சி வங்கி நிர்வாகம் அதிகாரப்பூர்வ விளக்கம் அளித்துள்ளது.

வங்கியின் அனைத்து ஆய்வுகளும் விதிமுறைகளின்படியே நடத்தப்படுவதாகக் குறிப்பிட்டுள்ள இந்த நிர்வாகச் சர்ச்சை, தற்போது சாமான்ய முதலீட்டாளர்கள் மத்தியிலும் உன்னிப்பாகக் கவனிக்கப்பட்டு வருகிறது.