மகாராஷ்டிர மாநிலம் ஜல்கான் மாவட்டத்தில் உள்ள ராஜுரா கிராமத்தில் கணவன்-மனைவி இடையேயான குடும்பத் தகராறு காரணமாக, தந்தை ஒருவர் தனது 4 குழந்தைகளைக் கிணற்றில் வீசிக் கொன்றுவிட்டுத் தானும் தற்கொலை செய்து கொண்ட அதிர்ச்சிச் சம்பவம் அப்பகுதியையே உலுக்கியுள்ளது.
அதாவது விஜய் கிராடியா (35) என்பவருக்கும், அவரது மனைவிக்கும் இடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு மீண்டும் ஏற்பட்ட மோதலால், கோபித்துக் கொண்ட அவரது மனைவி குழந்தைகளை வீட்டிலேயே விட்டுவிட்டுத் தனது தாய் வீட்டிற்குச் சென்றுவிட்டார்.
இதனால் விஜய் மட்டும் தனியாக இருந்து கொண்டு குழந்தைகளையும் கவனித்து, வீட்டு வேலைகளையும் செய்து வந்துள்ளார். இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை அவரது உறவினர்கள் சிலர் விஜய் மட்டும் தனியாக வேலை செய்வதைக் கண்டு, அவரது மனைவி எங்கே என்று கேட்டுள்ளனர். ச
மூகத்தில் ஏற்படும் அவப்பெயருக்கு அஞ்சியதாலும், உறவினர்களின் கேள்விகளால் ஏற்பட்ட கடுமையான மன உளைச்சலாலும் விஜய் இந்தத் முடிவை எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.
ஞாயிற்றுக்கிழமை இரவு, விஜய் தனது நான்கு குழந்தைகளான பிரீத், பிராச்சி, பூர்வி மற்றும் மகன் பியூஷ் ஆகியோரை கிராமத்திற்கு அருகில் உள்ள அணைப் பகுதியில் உள்ள ஒரு கிணற்றுக்கு அழைத்துச் சென்றுள்ளார்.
அங்கு நான்கு குழந்தைகளையும் அடுத்தடுத்து கிணற்றுக்குள் தள்ளிவிட்டு, பின்னர் விஜய்யும் கிணற்றில் குதித்துத் தனது உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார். திங்கள்கிழமை காலை கிணற்றில் ஐந்து சடலங்கள் மிதப்பதைக் கண்ட கிராம மக்கள் அதிர்ச்சியடைந்து போலீசாருக்குத் தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் சடலங்களை மீட்டுப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்ததோடு, வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் பலியான இந்த சோகச் சம்பவம் ஒட்டுமொத்த கிராமத்தையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
