தெலங்கானா மாநிலம் மஞ்செரியல் மாவட்டம் குடிபேட் கிராமத்தைச் சேர்ந்த சைனி குமார் என்பவர், கடந்த மே 22-ஆம் தேதி இருசக்கர வாகன விபத்தில் படுகாயமடைந்து உயிரிழந்ததாகக் கூறப்பட்ட வழக்கில், அது திட்டமிட்ட படுகொலை என்பதை போலீசார் அம்பலப்படுத்தியுள்ளனர்.

அதாவது சைனி குமாரின் மனைவிக்கு அதே கிராமத்தைச் சேர்ந்த ஒரு வாலிபருடன் கள்ளக்காதல் இருந்து வந்த நிலையில், தங்களின் காதலுக்கு இடையூறாக இருந்த கணவனை ஒழித்துக்கட்ட அவர்கள் சதித் திட்டம் தீட்டியுள்ளனர். மேலும், சைனி குமாரின் பெயரில் இருந்த பல ஆயுள் காப்பீட்டு பாலிசிகள் மூலம், அவர் விபத்தில் இறந்தால் சுமார் 2 கோடி ரூபாய் காப்பீட்டுத் தொகை கிடைக்கும் என்பதால், காப்பீட்டுப் பணத்திற்கு ஆசைப்பட்டு இக்கொடூரச் செயலை அரங்கேற்றியுள்ளனர்.

இக்கொலையைச் செய்வதற்காக மேலும் இருவரை கூலிக்கு அமர்த்திய கள்ளக்காதல் ஜோடி, சம்பவத்தன்று சைனி குமாருக்கு அதிகப்படியான மதுவைக் கொடுத்து, தனிமையான இடத்திற்கு அழைத்துச் சென்று இரும்பு கம்பியால் தலையில் அடித்துக் கொடூரமாகக் கொலை செய்துள்ளனர்.

பின்னர் இக்கொலையைச் சாலை விபத்து போலக் காட்டுவதற்காக, குமாரின் இருசக்கர வாகனத்தை சாலையோரம் வீசி எறிந்துவிட்டு அவர்கள் தப்பியோடியுள்ளனர். மகனின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகக் குமாரின் தாயார் அளித்த புகாரின் பேரில், போலீசார் தொலைபேசி அழைப்பு விவரங்கள் மற்றும் தொழில்நுட்ப ஆதாரங்களை ஆய்வு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் மனைவியின் முன்னுக்குப் பின் முரணான பதில்களால் உண்மை வெளிச்சத்திற்கு வந்தது.

இதனைத் தொடர்ந்து சைனி குமாரின் மனைவி, அவரது கள்ளக்காதலன் மற்றும் கூலிப்படையினர் உட்பட நான்கு பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதில் மனைவி உட்பட மூன்று பேர் தற்போது கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலுக்கு அனுப்பப்பட்டுள்ள நிலையில், தலைமறைவாக உள்ள மற்றொரு நபரை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

மேலும் கைதானவர்களிடமிருந்து காப்பீட்டு ஆவணங்கள் மற்றும் ரொக்கப் பணமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.