மனித வாழ்வின் மிக முக்கிய மைல்கல்லான 40 வயதைக் கடந்தவுடன் உடலில் ஏற்படும் பல்வேறு உயிரியல் மாற்றங்களால், உடல் எடையைக் குறைப்பது என்பது பெரும்பாலான மக்களுக்குப் பெரும் சவாலாக உருவெடுத்துள்ளதாக மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

இந்த வயதில் உடலின் வளர்சிதை மாற்றம் (Metabolism) பெருமளவில் குறைவதோடு, தசை இழப்பும் (Muscle loss) ஏற்படுவதால், கலோரிகளை எற்கும் திறன் உடலுக்குக் கணிசமாகக் குறைந்து விடுகிறது. குறிப்பாக, இந்தியர்களில் பலருக்குக் கை, கால்கள் பலவீனமடைந்து, தசை இழப்பின் காரணமாக வயிறு மட்டும் தனியாகத் துருத்திக்கொண்டு கொழுப்புடன் காணப்படுவதற்கு இந்த உயிரியல் மாற்றமே பிரதான காரணமாக அமைகிறது.

இதனால் 20-களில் உண்ட அதே உணவுப் பழக்கவழக்கங்களை 40 வயதிலும் தொடரும் போது, பயன்படுத்தப்படாத ஆற்றல் அனைத்தும் கொழுப்பாக மாறி உடல் எடையை மளமளவென உயர்த்தி விடுகிறது.

மறுபுறம், பெண்களுக்கு ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் குறைபாட்டை ஏற்படுத்தும் மாதவிடாய் நின்றதற்கு முந்தைய காலகட்டம் (Perimenopause) மற்றும் மாதவிடாய் நிறுத்தக் காலம் (Menopause) ஆகியவை உடல் எடையில் கடுமையான எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.

இதனுடன் வயது முதிர்வு மற்றும் ஆற்றல் பற்றாக்குறை என்ற பெயரில் அன்றாட உடல் உழைப்பைக் குறைத்துக் கொண்டு எப்போதும் உட்கார்ந்தே இருப்பது, கலோரிகளை எரிக்கும் திறனை முடக்கி விடுகிறது. மேலும், இந்த நடுத்தர வயதில் குழந்தைகளைப் பராமரித்தல், வயதான பெற்றோர்களைக் கவனித்தல் மற்றும் தொழில் வாழ்க்கையின் சவால்கள் எனப் பொறுப்புகள் இரட்டிப்பாவதால் ஏற்படும் அதீத மன அழுத்தமும், தூக்கமின்மையும் உடல் எடையைக் குறைப்பதை மேலும் கடினமாக்குகிறது.

எனவே, முறையான கலோரி சமநிலை மற்றும் எடைப் பயிற்சிகளில் (Weight training) ஈடுபடாவிட்டால் கொழுப்பு சேர்வதையும் உடல் எடை அதிகரிப்பதையும் தவிர்க்க முடியாது என்று நிபுணர்கள் தெளிவுபடுத்தியுள்ளனர்.