மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் பதற்றங்கள் மற்றும் ஹார்முஸ் ஜலசந்தி நெருக்கடிக்கு மத்தியில், ஆசியாவையும் ஐரோப்பாவையும் இணைக்கும் புதிய வர்த்தகப் பாதையை உருவாக்க கஜகஸ்தான் சுமார் 10 பில்லியன் டாலர் முதலீட்டில் ஒரு பிரம்மாண்டமான ரயில் திட்டத்தை முன்னெடுத்து வருகிறது.
இந்த டிரான்ஸ்-காஸ்பியன் சர்வதேச போக்குவரத்து வழித்தடம், சீனா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு இடையே சரக்கு போக்குவரத்தை வேகமாகவும் பாதுகாப்பாகவும் மாற்றும் நோக்கம் கொண்டது. கடல் மார்க்கத்துடன் ஒப்பிடுகையில், இந்த ரயில் பாதை மூலம் சுமார் 15 நாட்கள் முன்னதாகவே சரக்குகளை இலக்கைச் சென்றடையச் செய்ய முடியும் என்பது இதன் முக்கிய சிறப்பம்சமாகும்.
இந்தக் கஜகஸ்தான், காஸ்பியன் கடல், அஜர்பைஜான், ஜார்ஜியா மற்றும் துருக்கி வழியாகச் சென்று ஐரோப்பாவை அடைகிறது. இதற்காக கஜகஸ்தான் தனது ரயில் நெட்வொர்க்கை நவீனப்படுத்துவதுடன், அக்தாவ் துறைமுகத்தை மேம்படுத்தி, புதிய ரயில் நிலையங்களையும் அமைத்து வருகிறது.
இந்த முயற்சி உலகளாவிய வர்த்தகத்திற்கு ஒரு முக்கியமான மாற்றாக உருவெடுத்துள்ளதுடன், அரசியல் ரீதியாக ஸ்திரமான மற்றும் விரைவான போக்குவரத்துத் தேவையைக் கொண்ட நாடுகளுக்குப் பெரும் பயனளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒத்துழைப்புடன் நடைபெறும் இந்தப் பணி, எதிர்காலத்தில் சரக்கு போக்குவரத்தை பல மடங்கு அதிகரிக்கும் என கஜகஸ்தான் கணிக்கிறது.
