உலகமே உற்றுநோக்கும் ‘ஹோர்முஸ்’ நீரிணைப் பகுதியில் பதற்றம் ஒருபுறம் இருக்க, மறுபுறம் பல பில்லியன் டாலர் மதிப்புள்ள தனது சொந்தப் பணத்தை எடுக்க முடியாமல் ஈரான் விழிபிதுங்கி நிற்கிறது. 1979-ல் தொடங்கிய அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகள், இன்றுவரை ஈரானின் கழுத்தை நெரித்துக்கொண்டிருக்கிறது.
மேலும் ஜப்பான், ஈராக், சீனா எனப் பல நாடுகளில் முடங்கிக் கிடக்கும் ஈரானின் சுமார் 100 பில்லியன் டாலருக்கும் அதிகமான சொத்துகளை விடுவிக்க அமெரிக்கா பச்சைக்கொடி காட்ட மறுக்கிறது. அணுசக்தி ஒப்பந்தம், போர்க் குற்றச்சாட்டுகள் எனப் பல காரணங்களை அடுக்கும் அமெரிக்கா, “ஈரான் சீர் திருந்தினால் மட்டுமே பணம் விடுவிக்கப்படும்” என்று கறாராகச் சொல்லி வருகிறது.
இதனால் ஒருபுறம் பொருளாதார நெருக்கடி, இன்னொருபுறம் கடல்வழி வர்த்தகப் பாதையான ஹோர்முஸில் அமெரிக்காவுடனான மோதல் என, ஈரான் தன் பணத்தை மீட்டெடுக்கப் போடும் கணக்குகள் அந்தப் பகுதியையே போர்க்களமாக மாற்றும் அபாயம் கூடியிருக்கிறது! பசிக்கு உணவில்லாமல் தன் கஜானாவைப் பார்த்து ஏங்கும் ஒரு நாட்டின் பரிதாப நிலையும், அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
