​சாப்பிடும்போது உணவுக்குழாயில் உணவு சிக்கி உயிருக்கே ஆபத்தாகும் சம்பவங்கள் அரிதாக நடப்பதுண்டு. அமெரிக்காவின் பிலடெல்பியா பகுதியைச் சேர்ந்த 53 வயதான கெல்சி என்ற பெண், தனது குடும்பத்தினருடன் இரவு உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக ஸ்டேக் (இறைச்சி) துண்டு ஒன்று அவரது தொண்டையில் சிக்கியது. இதனால் மூச்சுக்குழாய் முற்றிலும் அடைக்கப்பட்டு, மூச்சுவிட முடியாமல் அவர் திணறினார்.

குடும்பத்தினர் உடனடியாக முதலுதவி செய்தும் பலனின்றி, கெல்சியின் சுவாசம் நின்றுபோனது. சுமார் மூன்றரை நிமிடங்கள் ஆக்ஸிஜன் கிடைக்காமல், மரணத்தின் விளிம்பிற்குச் சென்ற அவர், பின்னர் மருத்துவர்களின் தீவிர முயற்சியால் அற்புதம் போல் உயிர் பிழைத்தார். ​இந்த 3.5 நிமிட மரணப் போராட்டத்தில் தனக்கு ஏற்பட்ட ‘அதிசய அனுபவத்தை’ (Near-Death Experience) கெல்சி தற்போது பகிர்ந்துள்ளார்.

கண்கள் மூடிய அந்த கணத்தில், பேரமைதியான ஒரு இருட்டு உலகிற்குள் சென்றதாகவும், தனது வாழ்நாளில் செய்த நல்ல மற்றும் கெட்ட காரியங்கள் அனைத்தும் ஒரு திரை போல கண்முன்னே வந்து சென்றதாகவும் அவர் கூறியுள்ளார். நாம் வாழும் வாழ்க்கையில் அந்தஸ்து, பணம் எதற்கும் மதிப்பதில்லை என்றும், அன்பும் நம்முடைய நற்கர்மாவே முக்கியம் என்பதை இந்த மரண அனுபவம் தனக்கு உணர்த்தியதாக நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.