மும்பை விமான நிலையத்திற்கு அருகில் ஆட்டோ ஓட்டுநர் ஒருவரால் பெண் ஒருவர் மிரட்டப்பட்ட சம்பவம் சமூக வலைதளங்களில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விமான நிலையத்தின் இரண்டாம் முனையத்திலிருந்து ஆட்டோவில் சென்ற அந்தப் பெண், ஓட்டுநர் மீட்டரைப் பயன்படுத்த மறுத்ததால் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
மேலும் பயணம் பாதியில் சஹார் கார்கோ சிக்னல் அருகே சென்றபோது, ஓட்டுநர் அவரை மிரட்டியதோடு, காவல் துறையின் அவசர உதவி எண்ணான 100-ஐ அழைக்க முயன்றபோது அப்பெண்ணின் செல்போனைப் பறித்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த பயங்கரமான அனுபவம் குறித்து அந்தப் பெண் சமூக வலைதளத்தில் புகார் பதிவிட்டதைத் தொடர்ந்து, மும்பை காவல்துறை உடனடியாக நடவடிக்கை எடுத்துள்ளது. சம்பந்தப்பட்ட சஹார் போக்குவரத்துப் பிரிவினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டிருப்பதாக காவல்துறையினர் உறுதியளித்துள்ளனர்.
இந்நிலையில் பொதுப் போக்குவரத்து ஓட்டுநர்களின் இத்தகைய பொறுப்பற்ற மற்றும் ஆபத்தான செயல்கள் பொதுமக்களிடையே, குறிப்பாகப் பெண் பயணிகளிடையே பெரும் பாதுகாப்பு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளன. குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது.
