ஐபிஎல் 2026 டி20 கிரிக்கெட் தொடரின் 69-வது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை 30 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பிளே-ஆஃப் சுற்றுக்கு கம்பீரமாகத் தகுதி பெற்றுள்ளது. இந்தத் தோல்வியின் மூலம் மும்பை இந்தியன்ஸ் அணி நடப்புத் தொடரிலிருந்து அதிகாரப்பூர்வமாக வெளியேறியுள்ளது.

மும்பை வான்கடே மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இப்போட்டியில், டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதன்படி முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, மும்பையின் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்து 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 205 ரன்கள் குவித்தது.

இதையடுத்து 206 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் களம் இறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணியால், ராஜஸ்தானின் துல்லியமான பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 175 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதன் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 30 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று, 16 புள்ளிகளுடன் பிளே-ஆஃப் சுற்றுக்குள் நுழைந்தது.

இப்போட்டியின் போது ராஜஸ்தான் அணியின் ரவீந்திர ஜடேஜா மற்றும் மும்பை அணியின் ஷர்துல் தாகூர் இடையே நடந்த சுவாரசியமான மோதல் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ராஜஸ்தான் இன்னிங்ஸின் 20-வது ஓவரை ஷர்துல் தாகூர் வீசினார். அந்த ஓவரின் 4-வது பந்தில் ஜடேஜா விக்கெட்டை வீழ்த்திய ஷர்துல் தாகூர், அவரை கிண்டல் செய்யும் விதமாகக் கொண்டாடினார்.

ஆனால், அடுத்த கணமே அது ‘நோ-பால்’  என மைதானத்தில் சைரன் ஒலித்தது. இதனால் விக்கெட் தப்பியது மட்டுமின்றி, கிடைத்த ‘ஃப்ரீ-ஹிட்’ பந்தில் ஜடேஜா அதிரடியாக பவுண்டரி அடித்து, பதிலுக்கு ஷர்துல் தாகூரை கிண்டல் செய்தார். இந்த வீடியோ ரசிகர்களைப் பெரிதும் கவர்ந்துள்ளது.

மேலும் இப்போட்டியின் முடிவுடன் ஐபிஎல் 2026 தொடரின் பிளே-ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ள 4 அணிகள் எவை என்பது அதிகாரப்பூர்வமாக உறுதியாகியுள்ளது. அதன்படி  ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, குஜராத் டைட்டன்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய அணிகள் பிளே-ஆஃப் சுற்றுக்கு முன்னேறியுள்ளன.