இந்தியத் தகவல் தொழில்நுட்ப  வேலைச் சந்தையின் தற்போதைய நிலையைத் துல்லியமாகப் பிரதிபலிக்கும் வகையில், ரெடிட்  தளத்தில் டெவலப்பர் ஒருவர் பகிர்ந்துள்ள அப்ரைசல் மீட்டிங் அனுபவம் இணையத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

தனது சம்பள உயர்வுக்கான மீட்டிங்கிற்குச் சென்ற அந்த ஊழியரிடம், நிறுவனத்தில் புதிய திட்டங்கள் எதுவும் இல்லாததால் வேறு வேலை தேடிக்கொள்ளுமாறு மேலாளர் அதிர்ச்சியளித்துள்ளார்.

ஆனால், வேலை பறிபோகும் அந்த இக்கட்டான சூழலில், நிறுவனத்தின் இணையதளத்தில் ஏஐ தொழில்நுட்பத்தைப் புகுத்தி பிசினஸை எப்படி வளர்க்கலாம் என்ற தனது புதிய ஐடியாக்களை அந்த ஊழியர் மேலாளரிடம் பிட்ச் செய்துள்ளார். இந்த ஒற்றை உரையாடல் மீட்டிங்கின் போக்கையே தலைகீழாக மாற்றியுள்ளது.

ஊழியரின் ஐடியாக்களால் கவரப்பட்ட மேலாளர், அடுத்த இரண்டு மாதங்களுக்கு அவரது செயல்பாடுகளைக் கண்காணித்து, இந்த ஏஐ திட்டங்களை வெற்றிகரமாக முடித்தால் நல்ல சம்பளத்துடன் பதவி உயர்வும் தருவதாக உறுதியளித்துள்ளார்.

ஏற்கனவே மூன்று மாதங்களாக வேலை தேடியும் ஆஃபர் எதுவும் கிடைக்காத விரக்தியிலேயே, பிழைப்பதற்காக இந்த ஐடியாவைக் கூறியதாக அந்த ஊழியர் ரெடிட்டில் பதிவிட்டுள்ளார்.

இதற்குப் பதிலளித்துள்ள நெட்டிசன்கள் பலர், “ஐடி சந்தை மிகவும் மோசமாக இருப்பதால் அப்ரைசல் மீட்டிங்கில் ‘இந்தியாஸ் காட் டேலண்ட்’ நடத்த வேண்டியுள்ளது” என்று கிண்டலடித்துள்ளனர்.

அதேநேரம், “உங்களது ஐடியாக்களைப் பயன்படுத்திக் கொண்டு உங்களை வேலைநீக்கம் செய்ய அதிக வாய்ப்புள்ளது; எனவே வாய்மொழி வார்த்தைகளை நம்பாமல், தொடர்ந்து வேறு வேலை தேடுங்கள்” என்றும் பலர் அந்த ஊழியருக்கு எச்சரிக்கையும் ஆலோசனையும் வழங்கியுள்ளனர்.