தமிழகச் சட்டசபை தேர்தலில் திமுக தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, தவெக கட்சி காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்டுகள் மற்றும் ஐயூஎம்எல் ஆகிய கட்சிகளின் ஆதரவோடு ஆட்சி அமைத்துள்ளது. இதனால் அதிருப்தியடைந்த திமுக இளைஞரணி, அண்ணா அறிவாலயத்தில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் ‘முதுகில் குத்திய காங்கிரஸ் கட்சிக்கு கண்டனம்’ என்று தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் தனது எக்ஸ் பக்கத்தில் திமுகவை மிகக் கடுமையாகச் சாடியுள்ளார். தேர்தல் முடிவுகள் வரும்போதே திமுகவும் அதிமுகவும் பாஜக மூத்த தலைவர் ஒருவரின் முன்னிலையில் ரகசியப் பேச்சுவார்த்தையைத் தொடங்கிவிட்டதாக மாணிக்கம் தாகூர் குற்றம் சாட்டியுள்ளார்.

பாஜகவுடன் பின்னணி அரசியல் செய்யும் திமுகவின் நாடகம் இப்போது அம்பலமாகிவிட்டதாகவும், விஜய் முதலமைச்சராவதைத் தடுக்க அவர்கள் போட்ட திட்டம் தோற்றுப்போனதால் தான் இப்போது தீர்மானம் போட்டு நாடகமாடுகிறார்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.

மேலும், திமுகவின் இந்த ரகசியப் பேச்சுவார்த்தைகளை விசிக, சிபிஎம், ஐயூஎம்எல் ஆகிய தோழமைக் கட்சித் தலைவர்களே வெளிப்படையாக உடைத்துவிட்டதாகவும், தமிழகமக்கள் இவர்களின் உண்மையான முகத்தைப் பார்த்துவிட்டார்கள் என்றும் அவர் காரசாரமாகத் தெரிவித்துள்ளார்.