விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்தவர் சாந்தி (42). தூய்மைப் பணியாளரான இவரது கணவர் பாண்டியராஜ் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்தார். இதனால் தனது 17 வயது மகன் மற்றும் 13 வயது மகளுடன் சாந்தி வசித்து வந்தார். இவருடன், கடந்த 6 மாதங்களுக்கு முன்பு கணவனை இழந்த பாண்டியராஜின் அக்கா ஸ்ரீதேவியும் (45) உடன் தங்கி வந்துள்ளார். இந்நிலையில், தனது குடும்ப வறுமை தீர குறி பார்ப்பதற்காக, காரியாபட்டி அருகே உள்ள கள்ளக்குறிச்சி மணி நகரைச் சேர்ந்த கோடாங்கி முத்து என்பவரை சாந்தி அணுகியுள்ளார்.
சாந்தியின் வீட்டிற்கு வந்து பரிகாரம் செய்துவிட்டுச் சென்ற முத்து, பின்னர் சாந்தியிடம் அவருடன் சேர்ந்து வாழ ஆசைப்படுவதாகக் கூறி பலமுறை வற்புறுத்தியுள்ளார். இதற்கு சாந்தி தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வந்ததால் ஆத்திரமடைந்த கோடாங்கி முத்து, நள்ளிரவில் கதவை பூட்டாமல் தூங்கிக் கொண்டிருந்த சாந்தி மற்றும் ஸ்ரீதேவி மீது பெட்ரோலை ஊற்றி கொடூரமாக தீ வைத்துவிட்டு தப்பி ஓடியுள்ளார்.
பெண்களின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர், உடனடியாக அருப்புக்கோட்டை நகர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், பலத்த தீக்காயமடைந்த சாந்தி மற்றும் ஸ்ரீதேவியை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். நல்வாய்ப்பாக, வீட்டின் உள்ளே தூங்கிக் கொண்டிருந்த சாந்தியின் குழந்தைகள் இருவரும் எந்தவித தீக்காயமும் இன்றி உயிர் தப்பினர்.
முதலுதவிக்குப் பிறகு, மேல் சிகிச்சைக்காக விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து காயமடைந்தவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில், தங்களை வற்புறுத்தி வந்த கோடாங்கி முத்துதான் இந்த கொடூர செயலைச் செய்தார் என்று அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், தப்பியோடிய கோடாங்கி முத்துவை போலீசார் அதிரடியாகக் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
