தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் தமிழக முதல்வருமான விஜய்யின் ஜாதகத்தை அலசி ஆராய்ந்த பிரபல ஜோதிடரும் பாஜக நிர்வாகியுமான ஷெல்வீ தாமோதரன், இனிமேல்தான் விஜய்யின் உண்மையான அரசியல் ஆட்டம் ஆரம்பமாகப் போகிறது என்று அதிரடியாகக் கணித்துள்ளார்.
கடக ராசி பூச நட்சத்திரத்தில் பிறந்த விஜய்க்கு, இத்தனை காலம் ஆட்டிப்படைத்த அஷ்டம சனி தற்போது முழுமையாக விலகிவிட்டதாகவும், அவருக்கு ‘நீச்சபங்க ராஜயோகம்’ கைகூடி வந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், வரும் காலங்களில் தமிழக அரசியலில் விஜய்க்கும் உதயநிதி ஸ்டாலினுக்கும் இடையேதான் நேரடிப் போட்டி நிலவும் என்றும், அதிகாரிகளின் தலையீடு இல்லாமல் ஊழலை ஒழிக்க விஜய் எடுக்கும் அதிரடி நடவடிக்கைகள் மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெறும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
கூட்டணி கட்சிகளைக் கையாள்வதில் விஜய் ஒருபோதும் யாருடைய தவறான அரசியல் அழுத்தங்களுக்கும், பிடிவாதங்களுக்கும் வளைந்து கொடுக்க மாட்டார் என்று ஜோதிடர் ஷெல்வீ கூறியுள்ளார். தேவைப்பட்டால், ஆட்சி போனால் பரவாயில்லை என்று எதிர்க்கட்சியாக அமரவும் துணியும் அசாத்திய தைரியம் விஜய்யின் ஜாதகப்படி அவருக்கு இருப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தவெக-வின் பிரம்மாண்ட உறுப்பினர் சேர்க்கை மூலம் தேசிய அளவில் கவனம் பெற்றுள்ள விஜய்யின் பிம்பம், தென் மாவட்டங்கள் வரை பலமாக உள்ளதாகக் குறிப்பிட்ட அவர், காங்கிரஸ் கட்சியுடனான இணக்கமான சூழல் விஜய்க்குச் சில அரசியல் சவால்களை ஏற்படுத்தலாம் என்றும், கோவில்களில் சாமானிய பக்தர்களுக்கான தரிசன வசதிகளை மேம்படுத்த விஜய் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தனது வாழ்த்துகளுடன் கோரிக்கை விடுத்துள்ளார்.
