மேற்கு வங்கத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு, முதல் முறையாகப் பக்ரீத் பண்டிகை விடுமுறையில் பெரிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. முந்தைய திரிணாமூல் காங்கிரஸ் அரசு பக்ரீத் பண்டிகைக்கு இரண்டு நாட்கள் விடுமுறை அளித்திருந்த நிலையில், தற்போது ஆட்சியைப் பிடித்துள்ள பாஜக அரசு அந்த விதியை மாற்றிப் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இதன்படி, முந்தைய விடுமுறைப் பட்டியலில் மே 26 மற்றும் 27 ஆகிய தேதிகளில் அறிவிக்கப்பட்டிருந்த பக்ரீத் விடுமுறைகள் ரத்து செய்யப்பட்டு, அவை சாதாரண வேலை நாட்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த ஆண்டு மே 28-ஆம் தேதி (வியாழக்கிழமை) மட்டுமே மாநில அரசு ஊழியர்களுக்குப் பக்ரீத் பொது விடுமுறையாக இருக்கும் என்று ஆளுநரின் ஒப்புதலோடு வெளியிடப்பட்டுள்ள புதிய அரசாணையில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

விடுமுறை மாற்றம் ஒருபுறமிருக்க, பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு காளைகள், பசுக்கள், கன்றுகள் மற்றும் எருமைகளை இறைச்சிக்காக வெட்டுவதற்கு மேற்கு வங்க அரசு விதித்துள்ள தடை உத்தரவில் தலையிட கல்கத்தா உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.

விலங்குகளைப் பலியிடுவதை எதிர்க்கும் இந்த வழிகாட்டுதல்களுக்கு எதிரான மனுக்களை விசாரித்த தலைமை நீதிபதி சுஜோய் பால் மற்றும் நீதிபதி பார்த்த சாரதி சென் ஆகியோர் அடங்கிய அமர்வு, பசு பலியிடுதல் என்பது இஸ்லாமிய மத வழக்கத்தின் கீழ் ஒரு கட்டாயமான பகுதி அல்ல என்று உச்ச நீதிமன்றம் முன்பு அளித்த தீர்ப்பைச் சுட்டிக்காட்டியது.

மேலும், விலங்குகளை வதைப்பதைக் கட்டுப்படுத்தும் சட்டங்களின் கீழ் தேவையான சான்றிதழ்களை வழங்குவதற்கும், விதிகளை முறைப்படுத்துவதற்கும் மாநில அரசுக்கு முழு உரிமை உள்ளது எனக் கூறி நீதிமன்றம் இந்தத் தடையை உறுதி செய்துள்ளது.