அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், தன்னை பத்தாண்டுகளுக்கும் மேலாகத் தொடர்ந்து விமர்சித்து வந்த பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளர் ஸ்டீபன் கோல்பர்ட் என்பவரைக் குப்பைத் தொட்டிக்குள் தூக்கி வீசுவது போன்ற ஒரு வினோதமான ஏஐ (AI-செயற்கை நுண்ணறிவு) வீடியோவை தனது சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்து ஒட்டுமொத்த உலகையும் அதிரவைத்துள்ளார்.
அமெரிக்காவின் மிகவும் பிரபலமான ‘தி லேட் ஷோ’ (The Late Show with Stephen Colbert) என்ற நையாண்டி நிகழ்ச்சி, கடுமையான நிதி நெருக்கடி மற்றும் குறைந்து வரும் டிஆர்பி (TRP) காரணமாக கடந்த மே 21, 2026 அன்றுடன் முற்றிலும் முடிவுக்கு வந்தது.
— Donald J. Trump (@realDonaldTrump) May 22, 2026
இந்த நிகழ்ச்சி 11 ஆண்டுகளாக வெற்றிகரமாக நடந்து வந்தாலும், இதன் தொகுப்பாளரான ஸ்டீபன் கோல்பர்ட், ஆரம்பத்திலிருந்தே டிரம்பைக் குறிவைத்து அவரது அரசியல், தனிப்பட்ட வாழ்க்கை என அனைத்தையும் கடுமையாகக் கேலி செய்து வந்துள்ளார்.
இந்நிலையில், அந்த நிகழ்ச்சி முடிவடைந்த அடுத்த நாளே டிரம்ப் தனது பாணியில் ஒரு ‘ட்விஸ்ட்’ கொடுத்துள்ளார். அவர் பகிர்ந்துள்ள அந்த ஏஐ வீடியோவில், கோல்பர்ட்டின் பிரியாவிடை நிகழ்ச்சியின் போது மேடைக்குள் டிரம்ப் அதிரடியாக நுழைந்து, கோல்பர்ட்டை அப்படியே தூக்கி ஒரு பெரிய பச்சை நிறக் குப்பைத் தொட்டிக்குள் போடுகிறார்.
பின்னர் அதன் மூடியை மூடிவிட்டு, தனது டிரேட்மார்க் பாணியான ‘Y.M.C.A’ பாடலுக்கு உற்சாகமாக நடனமாட, கூட்டத்தினர் கைதட்டுவது போல் அந்த வீடியோ வடிவமைக்கப்பட்டுள்ளது. “இறுதியாகக் குப்பையை அகற்றிவிட்டேன்” என்பதை மறைமுகமாகக் காட்டும் இந்த வீடியோ, வெளியான சில மணிநேரங்களிலேயே 1.8 கோடிக்கும் அதிகமான வியூஸ்களைக் கடந்து இணையத்தில் காட்டுத்தீயாய் பரவி வருகிறது.
டிரம்பின் ஆதரவாளர்கள் இதனை “டிரம்பின் தரமான டிரோல்” என்று கொண்டாடி வரும் வேளையில், அவரது எதிர்ப்பாளர்களோ “ஒரு நாட்டின் அதிபர் இப்படிச் செய்வது முறையல்ல” என்று விமர்சித்து வருகின்றனர்.
