கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி கடத்தப்பட்டு, பாலியல் வன்கொடுமை செய்து படுகொலை செய்யப்பட்ட நெஞ்சை பதறவைக்கும் சம்பவம் குறித்துப் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அவர்கள் தனது எக்ஸ் (X) தளத்தில் கடுமையான கண்டனப் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த கொடூரச் செயலால் சிறுமியை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்குத் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ள அவர், முந்தைய திமுக ஆட்சியில் பெண்களும், குழந்தைகளும் சுதந்திரமாக நடமாட முடியாத அவலநிலை இருந்ததாகக் கடுமையான குற்றச்சாட்டைக் முன்வைத்துள்ளார்.
மேலும், திமுக ஆட்சியின் ஐந்தாண்டுகளில் மட்டும் குழந்தைகளுக்கு எதிராக 27 ஆயிரம் போக்சோ வழக்குகள் உட்பட மொத்தம் 62 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குற்றங்கள் நடந்துள்ளதைச் சுட்டிக்காட்டிய அவர், அதே போன்ற மோசமான நிலை இனியும் தொடராமல் அரசு பார்த்துக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
புதிதாகப் பொறுப்பேற்றுள்ள முதலமைச்சர் விஜய் அவர்கள் தலைமையிலான த.வெ.க அரசு, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்க ‘சிங்கப் பெண் சிறப்புப் படை’ உள்ளிட்ட பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருவதைப் பாராட்டியுள்ள அன்புமணி ராமதாஸ், அதே நேரத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பில் அரசு இன்னும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார்.
கோவையில் சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்து படுகொலை செய்த அந்தக் காட்டுமிராண்டிக் கயவர்களைச் சட்டத்தின் முன் நிறுத்தி, அவர்களுக்குக் கண்டிப்பாகத் தூக்குத் தண்டனை பெற்றுத் தருவதைத் தமிழக அரசு உடனடியாக உறுதி செய்ய வேண்டும் என்றும் மிக அதிரடியாகத் தனது பதிவில் டிமாண்ட் செய்துள்ளார்.
