கோவை மாவட்டத்தில் 10 வயது சிறுமி கடத்திக் கொலை செய்யப்பட்ட கொடூர சம்பவம் ஒட்டுமொத்த தமிழகத்தையும் உலுக்கியுள்ள நிலையில், இச்சம்பவம் குறித்துத் தமிழக முதலமைச்சர் விஜய் அவர்கள் தனது எக்ஸ் (X) தளத்தில் மிக ஆவேசமாகவும், வேதனையுடனும் அதிரடிப் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். கோயம்புத்தூரில் நேற்று நடந்த இந்த அநாகரிகமான சம்பவம் தனக்குப் பெரும் வேதனையையும், அதிர்ச்சியையும் அளித்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ள முதல்வர், இத்தகைய மனிதநேயமற்ற மற்றும் மன்னிக்க முடியாத குற்றச் செயல்கள் நமது சமூகத்தில் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப்பட முடியாது என்று திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
மேலும், தங்கள் உயிருக்குயிரான குழந்தையைப் பிரிந்து வாடும் சிறுமியின் குடும்பத்தினருக்குத் தனது ஆழ்ந்த இரங்கலையும், துயரத்தையும் பகிர்ந்து கொண்டுள்ளார். இந்த வழக்கில் தொடர்புடைய இரண்டு முக்கியக் குற்றவாளிகள் உடனடியாகக் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ள முதல்வர் விஜய், இச்சம்பவம் குறித்துத் தீவிர மற்றும் விரைவான விசாரணை மேற்கொண்டு, குற்றப்பத்திரிகையை உடனடியாகத் தாக்கல் செய்யத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறு காவல்துறைக்கு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
கோயம்புத்தூரில் நேற்று 10 வயது சிறுமிக்கு நிகழ்ந்த கொடூர சம்பவம் மிகுந்த வேதனையையும், அதிர்ச்சியையும் அளிக்கிறது. இத்தகைய மனிதநேயமற்ற மற்றும் மன்னிக்க முடியாத குற்றச் செயல்கள் நமது சமூகத்தில் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப்பட முடியாது.
தங்கள் உயிருக்குயிரான குழந்தையைப் பிரிந்து வாடும்…
— CMOTamilNadu (@CMOTamilnadu) May 23, 2026
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக நடைபெறும் இத்தகைய அராஜகச் செயல்களில் ஈடுபடுவோருக்குச் சட்டத்தின் கீழ் மிகக் கடுமையான தண்டனை பெற்றுத்தரத் தமிழ்நாடு அரசு உறுதியுடன் செயல்படும் என்றும், இதற்கான உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் முதல்வர் விஜய் மிக உறுதியாகப் பிரகடனம் செய்துள்ளார்.
