“ஈரான் போர்ச் சூழல் காரணமாக உலகளாவிய யூரியா உர விநியோகம் தடைபட்டுள்ளதால், சர்வதேச அளவில் விவசாயத் தொழில் மிகக் கடுமையான நெருக்கடியைச் சந்தித்து வருகிறது” என்று ப்ளூம்பெர்க் செய்தி நிறுவனம் கவலை தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளது.

உலக அளவில் விவசாயத்திற்குப் பரவலாகப் பயன்படுத்தப்படும் நைட்ரஜன் உரமான யூரியாவின் ஒட்டுமொத்த வர்த்தகத்தில், சுமார் மூன்றில் ஒரு பங்கு வளைகுடாப் பகுதியிலிருந்தே விநியோகிக்கப்படுகிறது. தற்போதைய பதற்றமான சூழலில் ஹார்முஸ் நீரிணைப் பகுதி முற்றுகையிடப்பட்டு மூடப்பட்டுள்ளதால், உரங்களின் விலை பல ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு உச்சத்தை எட்டியுள்ளது.

இதன் காரணமாக, இங்கிலாந்தின் யார்க்ஷயர் பகுதி விவசாயிகள் முதல் ஐரோப்பிய நாடுகள் வரை இரசாயன உரங்களுக்கு மாற்றாகக் கோழி எரு, பாதாம் ஓட்டுக் கழிவுகள் மற்றும் மனித சிறுநீரை பாக்டீரியா ஊடங்களாக மாற்றும் ‘டூப்பி ஆர்கானிக்ஸ்’ போன்ற இயற்கை ஸ்டார்ட்அப் தொழில்நுட்பங்களை நோக்கி வேகமாகத் திரும்பி வருகின்றனர்.

இந்த உர நெருக்கடி நீடித்தால் உலக அளவில் விளைச்சல் பெருமளவு குறைந்து மளிகைப் பொருட்களின் விலை தாறுமாறாக எகிறும் என்றும், கூடுதலாக 45 மில்லியன் மக்கள் கடுமையான உணவுப் பாதுகாப்பின்மையை எதிர்கொள்ள நேரிடும் என்றும் ஐக்கிய நாடுகள் சபை (UN) விடுத்துள்ள பகீர் எச்சரிக்கை உலக நாடுகளை அதிர வைத்துள்ளது.