இன்றைய டிஜிட்டல் உலகத்தில் ஆன்லைன் ஃபுட் மற்றும் கிராசரி டெலிவரி ஆப்ஸ்கள் மக்களின் வாழ்க்கையில் பிரிக்க முடியாத அங்கமாகிவிட்டன. இந்நிலையில், எக்ஸ் (ட்விட்டர்) தளத்தில் டெலிவரி ஏஜென்ட் ஒருவர் வெளியிட்ட வீடியோ, ஆன்லைன் டெலிவரி நிறுவனங்களின் பிசினஸ் மாடல் குறித்து ஒட்டுமொத்த இணையத்தையும் வாய் பிளக்க வைத்துள்ளது. சந்தையில் வெறும் 20 ரூபாய்க்கு விற்கப்படும் ஒரு சாதாரண தண்ணீர் பாட்டிலை, வாடிக்கையாளர் ஒருவர் ஆன்லைனில் 29 ரூபாய் கொடுத்து ஆர்டர் செய்துள்ளார். ஆனால், இந்த சின்ன ஆர்டரை கஸ்டமரிடம் கொண்டு சேர்த்ததற்காக, அந்த டெலிவரி பாய்க்கு சம்பந்தப்பட்ட நிறுவனம் 85 ரூபாய் கூலியாக வழங்கியுள்ளது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
”கஸ்டமரிடம் வெறும் 9 ரூபாய் கூடுதலாக வாங்கிவிட்டு, எனக்கு எப்படி 85 ரூபாய் கொடுத்தார்கள், இதில் கம்பெனிக்கு என்ன லாபம்?” என அந்த டெலிவரி பாய் வீடியோவில் கேள்வி எழுப்பியுள்ளார். இந்த வீடியோ வைரலானதை அடுத்து நெட்டிசன்கள், “ஆரம்பத்தில் கஸ்டமர்களை ஆப்ஸை பயன்படுத்த வைக்கும் மார்க்கெட்டிங் தந்திரம் (Strategy) இது” என்றும், “ஆர்டர் சின்னதோ பெருசோ, வெயில், டிராஃபிக்கில் உழைக்கும் டெலிவரி பார்ட்னருக்கு இந்த பணம் போய் சேருவது நியாயம்தான்” என்றும் இருவேறாகப் பிரிந்து தங்களது கருத்துக்களைக் குவித்து வருகின்றனர்.
