சென்னையை சேர்ந்த ஆட்டோ டிரைவர் லோகநாதனின் மகன் திலீபன் (24), பிரபல உணவகம் ஒன்றில் ஏ.சி. மெக்கானிக்காகப் பணிபுரிந்து வந்தார். விபத்தில் சிக்கிய தனது தந்தை வீட்டில் ஓய்வெடுத்து வருவதால், குடும்ப பாரத்தைச் சுமக்கப் பகலில் மெக்கானிக் வேலையையும், இரவில் ஆட்டோவையும் ஓட்டி வந்துள்ளார். கடந்த 5 ஆண்டுகளாக ஒரு பெண்ணைக் காதலித்து வந்த நிலையில், இருவீட்டாரும் சம்மதித்துக் கடந்த 17-ஆம் தேதி தான் இவர்களுக்குத் திருமண நிச்சயம் செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஏ.சி. குடோனில் காஸ் நிரப்பும் பணியில் திலீபன் ஈடுபட்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாகக் காஸ் சிலிண்டர் பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறியது. இந்த விபரீதத்தில் திலீபனின் இரண்டு கைகளும் துண்டாகித் தூக்கி வீசப்பட்ட கொடூரம் அரங்கேறியுள்ளது. விபத்தில் அலறித் துடித்த திலீபனை மீட்ட அக்கம் பக்கத்தினர், துண்டிக்கப்பட்ட அவரது கைகளையும் பத்திரப்படுத்தி உடனடியாகக் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.
அங்கு மருத்துவர்கள் தீவிர முயற்சி செய்தும் இரண்டு கைகளையும் மீண்டும் ஒட்ட வைக்கும் அறுவை சிகிச்சை தோல்வியில் முடிந்தது. இதனால் சுறுசுறுப்பாக வேலை செய்து வந்த திலீபன், தற்போது தனது இரண்டு கைகளையும் இழந்து நிரந்தர மாற்றுத்திறனாளியாகப் பரிதாப நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். திருமணம் நிச்சயிக்கப்பட்ட நிலையில் தன் காதலனுக்கு நேர்ந்த விபரீதத்தைக்கண்டு அந்தப் பெண்ணும், வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் திலீபனின் குடும்பத்தாரும் கண்ணீரில் மூழ்கியுள்ளனர்.
செயற்கைக் கைகள் பொருத்தப் பெரும் செலவாகும் என்பதால், மக்கள் நலனில் அக்கறை காட்டி வரும் முதலமைச்சர் விஜய் தலைமையிலான தமிழக அரசு தங்களுக்கு உரிய நிதியுதவியும், மருத்துவ உதவியும் செய்ய வேண்டும் என அக்குடும்பத்தினர் உருக்கமாகக் கோரிக்கை விடுத்துள்ளனர்.
