உலகம் முழுவதும் 300 கோடிக்கும் அதிகமான மக்களால் பயன்படுத்தப்படும் மெட்டா நிறுவனத்தின் வாட்ஸ்அப் செயலியில், பயனர்களின் தனியுரிமையை மேலும் பலப்படுத்தும் நோக்கில் ‘After Reading’ என்ற புதிய அம்சம் விரைவில் அறிமுகமாக உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த புதிய அம்சத்தின் மூலம், பயனர்கள் அனுப்பும் அல்லது பெறும் மெசேஜ்கள், சம்பந்தப்பட்ட நபர் அதைப் படித்து முடித்த அடுத்த கணமே தானாகவே மறைந்துவிடும்.

தற்போது நடைமுறையில் இருக்கும் குறிப்பிட்ட நேரக் கட்டுப்பாட்டுடன் மறையும் மற்றும் புகைப்படங்களுக்கான ‘View Once’ போன்ற வசதிகளின் அடுத்தகட்ட மேம்பாடாக இந்த அம்சம் பார்க்கப்படுகிறது. தனிப்பட்ட உரையாடல்கள் முதல் பள்ளி, அலுவலகக் குழுக்களின் தகவல் பரிமாற்றம் வரை மிக முக்கிய தளமாக விளங்கும் வாட்ஸ்அப்பில், இந்த புதிய வசதி தற்போது சோதனை கட்டத்தில் இருப்பதாகத் தெரிகிறது.

வாட்ஸ்அப்பின் வரவிருக்கும் புதிய அப்டேட்கள் மற்றும் அம்சங்கள் குறித்துத் துல்லியமான தகவல்களைத் தொடர்ந்து வெளியிட்டு வரும் ‘WABetaInfo’ தளம் இந்த எக்ஸ்க்ளூசிவ் விபரத்தை அதிகாரப்பூர்வமாகப் பகிர்ந்துள்ளது. பயனர்களின் சாட்டிங் அனுபவத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லவிருக்கும் இந்த அம்சம், விரைவில் ஆண்டிராய்டு மற்றும் ஐஓஎஸ் பயனர்களின் பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.