கோவை ஈஷா அறக்கட்டளை சார்பில் நடத்தப்பட்ட ‘ஈஷா கிராமோத்சவம்-2025’ விளையாட்டுத் திருவிழாவின் வாலிபால் போட்டியில், தனது துடிப்பான ஆட்டத்தால் அனைவரையும் கவர்ந்து தொடரின் சிறந்த விளையாட்டு வீரராகத் தேர்வானவர் மணிகண்டன். சேலம் மாவட்டம் உத்தமசோழபுரம் ஊராட்சியைச் சேர்ந்த இவரது அதிரடி ஆட்டத்தால் கடந்தாண்டு இறுதிப்போட்டியில் இவரது அணி சாம்பியன் பட்டம் வென்றது.
கிராமப்புற விளையாட்டுக் களத்தில் அசத்திய மணிகண்டனின் இந்த அசாத்திய திறமையைப் பாராட்டி, நாட்டின் முன்னணி வாலிபால் தொடரான பிரைம் வாலிபால் லீக்கில் பங்கேற்கும் ‘சென்னை பிளிட்ஸ்’ அணி, தங்களது முதன்மை பயிற்சி முகாமில் கலந்துகொள்ள அவருக்கு அதிகாரப்பூர்வ அழைப்பு விடுத்துள்ளது. இதன் மூலம் தேசிய மற்றும் சர்வதேச அளவிலான முன்னணி வீரர்களுடன் இணைந்து பயிற்சி பெறும் அரிய வாய்ப்பு மணிகண்டனுக்குக் கிடைத்துள்ளது.
மணிகண்டனின் இந்தத் தேர்வு குறித்துச் சென்னை பிளிட்ஸ் அணி அனுப்பியுள்ள கடிதத்தில், “இந்தியா முழுவதும் விளையாட்டு கலாசாரத்தை வளர்க்க ஈஷா கிராமோத்சவம் மேற்கொண்டு வரும் பணி பாராட்டுக்குரியது. மணிகண்டனுக்குக் கிடைத்துள்ள இந்த வாய்ப்பு அவரது தனிப்பட்ட திறமைக்கு மட்டுமல்லாமல், கிராமப்புறங்களில் உருவாகி வரும் ஆயிரக்கணக்கான வீரர்களின் திறனுக்கான அங்கீகாரம்” எனக் குறிப்பிட்டுள்ளது.
இத்திறமைக்கான அங்கீகாரத்தைக் கொண்டாடும் வகையில் ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், “மணிகண்டனுக்கும், கிராமப்புறதிறமைகளை அங்கீகரித்து அவர்களை முதன்மை விளையாட்டு அரங்கிற்கு கொண்டு வரும் சென்னை பிளிட்ஸ் அணிக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள்.
இந்த அங்கீகாரம், பாரதத்தின் கிராமப்புறங்கள் முழுவதும் ஈஷா கிராமோத்சவத்தை மேலும் விரிவுபடுத்துவதற்கான உத்வேகத்தையும், வேகத்தையும் வழங்கும்” எனப் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.
