ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றியது முதல், மனித உரிமைகளுக்கும் குறிப்பாகப் பெண்களின் சுதந்திரத்திற்கும் எதிரான பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், தாலிபான்கள் தற்போது கொண்டுவந்துள்ள புதிய திருமண மற்றும் குடும்பச் சட்டங்கள் உலக நாடுகளையும், மனித உரிமை அமைப்புகளையும் உலுக்கியுள்ளன. பெண்களை மனிதர்களாகவே மதிக்காத வகையில் உள்ள இந்தச் சட்டங்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.

சர்வதேச அளவில் கடும் விமர்சனங்களைச் சந்தித்து வரும் தாலிபான்களின் புதிய சட்டங்களின் படி ஒரு கன்னிப் பெண்ணிடம் திருமணத்திற்குச் சம்மதமா என்று கேட்கும்போது, அவர் வெட்கத்திலோ அல்லது பயத்திலோ ஏதும் பேசாமல் மௌனமாக இருந்தால், அந்த மௌனத்தையே திருமணத்திற்கான ‘சம்மதம்’ என்று எடுத்துக் கொள்ளலாம்.

ஒரு பெண் 18 வயது அடையாத மைனராக இருந்தாலும், அவரது தந்தையோ அல்லது தாத்தாவோ விரும்பினால் அந்தப் பெண்ணிற்குத் திருமணம் செய்து வைக்க முழு அதிகாரம் உண்டு. இத்தகைய திருமணத்தை நீதிமன்ற அனுமதியோடு மட்டுமே ரத்து செய்ய முடியும்.

கணவன் தனது மனைவியைக் கொடூரமாக அடித்தால், மனைவியின் உடலில் ஏதேனும் பலத்த காயம் ஏற்பட்டாலோ அல்லது எலும்பு உடைந்தாலோ மட்டுமே கணவன் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். சாதாரணக் காயங்களுக்குக் கணவனுக்குத் தண்டனை கிடையாது.

ஆப்கானிஸ்தானில் பெண்கள் 12 வயதைக் கடந்த பிறகு பள்ளி அல்லது கல்லூரிகளுக்குச் சென்று கல்வி பயிலக் கூடாது. தனது கணவனின் அனுமதி இல்லாமல், எந்தவொரு பெண்ணும் அவரது சொந்த பந்தங்கள் மற்றும் உறவினர்களின் வீடுகளுக்குச் செல்லக் கூடாது. மீறிச் சென்றால் கடுமையான தண்டனை விதிக்கப்படும்.

தாலிபான்களின் இந்த மனிதாபிமானமற்ற சட்டங்கள் குறித்த செய்திகள் சமூக வலைத்தளங்களில் பரவியதை அடுத்து, இந்திய நெட்டிசன்கள் தங்களது கண்டனங்களையும் கருத்துக்களையும் ஆவேசமாகப் பகிர்ந்து வருகின்றனர்.

இதுகுறித்து எக்ஸ் (X) மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கங்களில் இந்தியர்கள் பதிவிட்டுள்ளதாவது, “நாம் இந்தியாவில் பிறந்து வாழ்வதற்கு முதலில் இறைவனுக்கு நன்றி சொல்ல வேண்டும்”, “பெண்களுக்கும் சாதாரணக் குடிமக்களுக்கும் சம உரிமை வழங்கி, நம்மைப் பாதுகாக்கும் இந்திய அரசியல் சாசனத்தை உருவாக்கிய பாபாசாகேப் அம்பேத்கருக்கு நாம் ஒவ்வொரு நாளும் நன்றி சொல்ல வேண்டும்”, “எப்போதெல்லாம் ஒரு நாட்டில் மதவாதம் தீவிரமடைகிறதோ, அப்போதெல்லாம் அதன் முதல் இரை பெண்கள்தான்” என்று நெட்டிசன்கள் தங்களது கருத்துக்களைப் பதிவு செய்து வருகின்றனர்.

ஆப்கானிஸ்தானில் பெண்களின் நிலைமை நாளுக்கு நாள் மோசமடைந்து வரும் சூழலில், தாலிபான்களின் இந்த புதிய சட்டங்களுக்கு எதிராகப் பன்னாட்டு மனித உரிமை அமைப்புகள் தங்களது கண்டனக் குரல்களை வலுத்து வருகின்றன.