ஆஸ்திரேலியாவில் சூப்பர் மார்க்கெட்டில் வாங்கப்பட்ட லெட்டியூஸ் (Lettuce) கீரை பைக்குள் உயிருடன் பச்சைத் தவளை ஒன்று அசால்ட்டாக அமர்ந்திருந்த சம்பவம் இணையவாசிகளின் கண்கள் பிதுங்க வைத்துள்ளது.

அங்குள்ள விவசாயி ஒருவர் சமையலுக்காகக் கடையில் வாங்கி வந்த லெட்டியூஸ் கீரையின் இலைகளைத் தனித்தனியாகப் பிரித்தபோது, உள்ளே ஏதோ அசைவதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். உற்றுப் பார்த்தபோது, இலைகளுக்கு நடுவே ஒரு சிறிய தவளை எந்தவொரு காயமும் இல்லாமல் ஜாலியாக உட்கார்ந்திருந்தது.

கீரை அறுவடை செய்யப்பட்டு, தூய்மைப்படுத்தப்பட்டு, பேக்கிங் செய்யப்பட்டு, பின்னர் குளிர்சாதனப் பெட்டியில் வைக்கப்பட்டு, பல கிலோமீட்டர் கடந்து சூப்பர் மார்க்கெட்டுக்கு வரும் வரை எவராலும் கண்டுபிடிக்கப்படாமல் இந்தத் தவளை உயிர் பிழைத்திருப்பதுதான் பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

இது போன்ற தவளைகள் ஆபத்து வரும்போது அசையாமல் ஒரே இடத்தில் இருக்கும் குணம் கொண்டவை என்பதால், பேக்கிங் செய்யும்போது ஊழியர்களின் கண்ணில் படாமல் தப்பியிருக்கலாம் என்றும், குளிரூட்டப்பட்ட பெட்டிகளில் இருக்கும்போது இவற்றின் வளர்சிதை மாற்றம் (Metabolism) குறைந்துவிடுவதால் நீண்ட நாட்கள் உணவு இல்லாமல் உயிர் வாழ முடிந்தது என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர்.

அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்த அந்தத் தவளையைப் பத்திரமாக மீட்ட அந்த விவசாயி, அருகில் உள்ள பாதுகாப்பான நீர்நிலையில் கொண்டு போய் விட்டுவிட்டார்.

“கீரை அவ்வளவு பிரெஷ்ஷா இருக்குனு கம்பெனிக்காரங்க ப்ரூஃப் பண்ணியிருக்காங்க போல!” என்று நெட்டிசன்கள் இந்த வீடியோவைப் பார்த்துத் தங்களது பாணியில் கமெண்ட் செய்து கலாய்த்து வருகின்றனர்.