இந்திய பிரதமர் நரேந்திர மோடி இத்தாலி நாட்டின் ரோமிற்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டு அந்நாட்டுப் பிரதமர் ஜார்ஜியா மெலோனியைச் சந்தித்த போது, அங்கு அரங்கேறிய ஒரு சுவாரசியமான சாக்லேட் விவகாரம் தற்போது பங்குச்சந்தையில் பெரும் கூத்தை ஏற்படுத்தியுள்ளது.
இணையத்தில் எப்போதும் வைரலாகும் இவர்களது “மெலோடி” (Melodi) மீம்ஸ்களை மனதில்கொண்டு, பிரதமர் மோடி இத்தாலி பிரதமர் மெலோனிக்கு ‘பார்லே மெலடி’ (Parle Melody) சாக்லேட் பாக்கெட்டைப் பரிசாகக் கொடுத்து அசத்தினார்.
இந்த வீடியோ இன்ஸ்டாகிராமில் காட்டுத்தீயாய் பரவியதைத் தொடர்ந்து, மும்பை பங்குச்சந்தை (BSE) முதலீட்டாளர்கள் அவசர அவசரமாக “பார்லே” என்ற பெயரைத் தேடி அந்த நிறுவனத்தின் பங்குகளை வாரி அள்ளத் தொடங்கினர்.
இதனால் பங்குச்சந்தையில் சரிவு நிலவிய போதிலும், குறிப்பிட்ட அந்த ‘பார்லே’ நிறுவனத்தின் பங்கு ஒரே மணி நேரத்தில் 5 விழுக்காடு வரை கிடுகிடுவென உயர்ந்தது.
Thank you for the gift pic.twitter.com/7ePxbJwPbA
— Giorgia Meloni (@GiorgiaMeloni) May 20, 2026
ஆனால், இங்குதான் ஒரு மெகா திருப்பமே அரங்கேறியது. முதலீட்டாளர்கள் வாங்கிய பங்குகள் ‘பார்லே இண்டஸ்ட்ரீஸ்’ (Parle Industries) என்ற உள்கட்டமைப்பு மற்றும் ரியல் எஸ்டேட் நிறுவனத்துடையது ஆகும்.
உண்மையில் நாம் அனைவரும் சாப்பிடும் ‘மெலடி’ சாக்லேட், ‘பார்லே-ஜி’ பிஸ்கட் போன்றவற்றைத் தயாரிப்பது ‘பார்லே பிராடக்ட்ஸ்’ (Parle Products) என்ற எஃப்எம்சிஜி (FMCG) நிறுவனம் ஆகும்.
இது பங்குச்சந்தையில் பட்டியலிடப்படாத ஒரு தனியாருக்குச் சொந்தமான நிறுவனமாகும். வெறும் பெயர்ப் பொருத்தத்தை மட்டும் பார்த்துவிட்டு, சாக்லேட் கம்பெனி என நினைத்து ரியல் எஸ்டேட் கம்பெனியின் ஷேர்களை முதலீட்டாளர்கள் அவசரப்பட்டு வாங்கிய இந்த நூதனக் குளறுபடி, தற்போது ஒட்டுமொத்த வணிக உலகிலும் இணையத்திலும் ஒரு பெரிய நகைச்சுவையான விவாதப் பொருளாக மாறியுள்ளது.
