தமிழக அரசியலில் புதிய ஆட்சியை அமைத்துள்ள தமிழக வெற்றிக்கழகம் தனது அரசியல் மற்றும் ஊடகச் செல்வாக்கை மேலும் வலுப்படுத்தும் அதிரடி முயற்சியில் இறங்கியுள்ளது. தமிழகத்தில் உள்ள முக்கிய அரசியல் கட்சிகள் பலவும் தங்களுக்கெனச் சொந்தமாக ஊடகத் தளங்களை உருவாக்கி, தங்களின் கொள்கைகளையும் அரசியல் நிலைப்பாடுகளையும் மக்களிடம் கொண்டு சேர்த்து வருகின்றன.
அதே பாணியில், தற்போது ஆட்சியில் இருக்கும் தவெகவும் தனக்கெனத் தனித் தொலைக்காட்சி சேனல் ஒன்றைத் தொடங்கும் திட்டம் குறித்து முதலமைச்சர் விஜய் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன் மூலம் கட்சியின் சொந்த ஊடகபலத்தைப் பெருக்கிக் கொள்ள அக்கட்சி விரும்புவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்தத் புதிய டி.வி சேனல் தொடங்குவதற்கான சட்ட ரீதியான மற்றும் தொழில்நுட்ப நடைமுறைகள் குறித்து முழுமையாக ஆய்வு செய்யும் முக்கியப் பொறுப்பு, கட்சியின் தேர்தல் பிரச்சார மேலாண்மை பொதுச்செயலாளரும் அமைச்சருமான ஆதவ் அர்ஜுனாவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
புதிய சேனல் தொடங்குவதற்குத் தேவையான மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ அனுமதி, செயற்கைக்கோள் உரிமம் மற்றும் அதற்கான தொழில்நுட்பக் கட்டமைப்பு உள்ளிட்ட பல்வேறு முக்கிய அம்சங்கள் குறித்து அவர் தீவிரமாக ஆலோசித்து வருவதாகக் கோட்டை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
