ரஷ்யா மற்றும் ஈரானிடமிருந்து கியூபா 300-க்கும் மேற்பட்ட ராணுவ ஆளில்லா விமானங்களை வாங்கியுள்ளதாகச் சமீபத்திய அமெரிக்க அறிக்கை ஒன்று தெரிவிப்பது உலக அரங்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தனது ராணுவத் தளங்களுக்கு எதிராக இந்த ட்ரோன்கள் பயன்படுத்தப்படலாம் என அமெரிக்கா அஞ்சுவதைத் தொடர்ந்து, கியூபாவின் உளவுத்துறை மற்றும் உயர்மட்டத் தலைவர்கள் மீது பொருளாதாரத் தடைகளையும் விதித்துள்ளது.

கியூபாவிடம் தற்போது நவீன ஆயுதங்கள் இல்லை என்றாலும், நாடு தாக்கப்பட்டால் ராணுவத்துடன் சேர்ந்து பொதுமக்களும் போரில் குதிக்கும் ‘மக்கள் அனைவரும் பங்கேற்கும் போர்’ கொள்கையை அது பின்பற்றுகிறது. இதற்காக 10லட்சத்திற்கும் மேற்பட்ட வீரர்களைத் திரட்டும் திட்டத்துடன், மக்களுக்குக் கொரில்லாப் போர் முறைகளிலும் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. ஈரானைப் போலவே கியூபாவும் அமெரிக்காவை ஒரு நீண்டகால, அதிகச் செலவு பிடிக்கும் போரில் சிக்க வைக்கக்கூடும் என்று ராணுவ நிபுணர்கள் நம்புகின்றனர்.

அமெரிக்காவின் புளோரிடா கடற்கரைக்கு மிக அருகில் அமைந்துள்ள கியூபாவின் புவியியல் அமைவிடமே அதன் மிகப்பெரிய உத்தி ரீதியான பலமாகும். தியரிடமாகப் பெரிய நவீன ஆயுதங்கள் இல்லாத நிலையிலும், பழைய சரக்குந்துகளில் விமான எதிர்ப்புத் துப்பாக்கிகளைப் பொருத்துவது போன்ற உள்ளூர் மாற்று ஏற்பாடுகள், சமயோசிதக் கலப்புத் தொழில்நுட்பங்கள் மற்றும் கொரில்லா தாக்குதல்கள் மூலம் அமெரிக்காவிற்குச் சவால் விடுக்க அது தயாராகி வருகிறது.

மேலும், கியூப ராணுவத்தின் குழு அந்நாட்டின் ஹோட்டல்கள், வங்கிகள் உள்ளிட்ட முக்கிய வணிகங்களை நிர்வகிப்பதன் மூலம் நாட்டின்பொருளாதாரத்திலும் பலத்த பிடியைக் கொண்டுள்ளது. இருப்பினும், கியூபாவின் விமானப்படை மற்றும் கடற்படை முற்றிலும் காலாவதியான சோவியத் காலத்துத் தொழில்நுட்பங்களை நம்பியே உள்ளன. குறிப்பாக, அந்நாட்டில் நிலவும் கடுமையான எரிபொருள் பற்றாக்குறை மற்றும் மின்தடைகள் அதன் ராணுவப் பயிற்சி மற்றும் தகவல் தொடர்புகளைப் பெருமளவில் முடக்கியுள்ளது அதன் மிகப்பெரிய பலவீனமாகப் பார்க்கப்படுகிறது.