பொதுவாக மக்கள் காலையில் எழுந்தவுடன் தேநீர் அல்லது காபி குடிக்க விரும்புவார்கள். ஆனால், கனடாவைச் சேர்ந்த ஷானன் என்ற பெண், தினமும் காலையில் எழுந்தவுடன் பெட்ரோல் குடிக்கும் ஒரு ஆபத்தான பழக்கத்திற்கு அடிமையாகியுள்ளார். ஆரம்பத்தில் பெட்ரோல் வாசனையை மட்டும் நுகர்ந்து வந்த இவருக்கு, நாளடைவில் அதுவே ஒரு தீவிரமான போதையாக மாறியுள்ளது.

அமெரிக்கத் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் இவருடைய இந்த விசித்திரமான பழக்கம் வெளிச்சத்திற்கு வந்தபோது ஒட்டுமொத்த உலகமும் அதிர்ச்சியடைந்தது. தனக்கு மன அழுத்தம் அல்லது தனிமை ஏற்படும்போதெல்லாம் பெட்ரோல் குடிப்பதாகக் கூறும் ஷானன், அதைக் குடிக்கும்போது தன் நாக்கில் லேசான கூச்ச உணர்வும், தொண்டையில் கடுமையான எரிச்சலும் ஏற்பட்டாலும், அது தனக்கு மன அமைதியைத் தருவதால் அதை நிறுத்த முடியாமல் தவித்து வருவதாகக் கூறுகிறார்.

ஷானனின் இந்த ஆபத்தான பழக்கத்தைக் கண்டு அவரது குடும்பத்தினர் எவ்வளவோ தடுத்தும், அவர் நாள் முழுவதும் பலமுறை ரகசியமாகப் பெட்ரோல் குடித்து வருகிறார். மருத்துவ நிபுணர்களின் கூற்றுப்படி, பெட்ரோல் போன்ற நச்சுத்தன்மை வாய்ந்த இரசாயனங்களை உட்கொள்வது மனித உடலின் நுரையீரல், கல்லீரல், சிறுநீரகங்கள் மற்றும் மூளையைத் தீவிரமாகப் பாதித்து, நரம்பியல் மற்றும் சுவாசக் கோளாறுகளை ஏற்படுத்தி எந்த நேரத்திலும் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கக்கூடும்.

மனநல மருத்துவர்கள் இந்த அசாதாரண நடத்தைக்குக் காரணம் ஒரு சாதாரண போதைப்பழக்கம் அல்ல, மாறாக இது ‘பிக்கா கோளாறு எனப்படும் ஒரு அரிய மருத்துவ நிலை என்று விளக்குகின்றனர். இந்தக் கோளாறால் பாதிக்கப்பட்டவர்கள் களிமண், சுண்ணாம்பு, பெயிண்ட் அல்லது பெட்ரோல் போன்ற மனித உடலுக்கு உகந்ததல்லாத நச்சுப் பொருட்களை உட்கொள்ளும் மனநிலைக்குத் தள்ளப்படுவார்கள் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்