தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் ஐபிஎல் 2026 கிரிக்கெட் தொடரில், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் தாமதமாக அணியில் இணைந்தது குறித்து, ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தை டெல்லி அணியின் தலைமைப் பயிற்சியாளர் ஹேமங் பதானி மறைமுகமாக விமர்சித்துள்ளார்.
ஐபிஎல் 2026 தொடரின் 62-வது லீக் போட்டியில், டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை டெல்லி கேப்பிட்டல்ஸ் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. இப்போட்டியில் 40 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 4 முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தி டெல்லியின் வெற்றிக்குக் காரணமானார் மிட்செல் ஸ்டார்க்.
முன்னதாக, பணிச்சுமை மேலாண்மை மற்றும் காயம் காரணமாக மிட்செல் ஸ்டார்க்கை ஐபிஎல் தொடரில் விளையாட அனுமதிப்பதில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் தாமதம் காட்டியது. இதனால் தொடரின் ஆரம்பகட்ட போட்டிகளைத் தவறவிட்ட ஸ்டார்க், கடந்த மே 1-ஆம் தேதி தான் டெல்லி அணியுடன் இணைந்தார்.
ராஜஸ்தான் அணிக்கு எதிரான வெற்றிக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய தலைமைப் பயிற்சியாளர் ஹேமங் பதானி, “ஒரு பயிற்சியாளராக எனது அணியின் முக்கிய வீரர்கள் முதல் நாளில் இருந்தே எனக்குக் கிடைக்க வேண்டும் என்றுதான் நான் விரும்புவேன். எங்கள் அணியின் மிகப்பெரிய மேட்ச் வின்னர் ஸ்டார்க் தான். அவர் மீது நாங்கள் அதிக முதலீடு செய்துள்ளோம்.
ஆனால், பிற நாட்டு கிரிக்கெட் வாரியங்கள் மற்றும் நிர்வாகங்கள் எடுக்கும் முடிவுகளில் எங்களைப் போன்ற ஐபிஎல் பிரான்சைஸிகளோ அல்லது பயிற்சியாளர்களோ எதுவும் செய்ய முடியாது. ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் அவரை விடுவிக்காத போது எங்களால் என்ன செய்ய முடியும்?” என்று தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.
இருப்பினும், மிட்செல் ஸ்டார்க்கின் அர்ப்பணிப்பை வெகுவாகப் பாராட்டிய பதானி, “அவரது பணி நெறிமுறையும், போட்டிக்கு முந்தைய திட்டமிடல்களும் அசாத்தியமானவை. சமீபத்திய ஆஷஸ் தொடரில் பேட் கம்மின்ஸ், ஜோஷ் ஹேசில்வுட் இல்லாத நிலையிலும் தனி ஒருவனாக ஆஸ்திரேலியாவிற்கு ஆஷஸ் கோப்பையை வென்று கொடுத்தவர் அவர். அணியில் உள்ள இளம் பந்துவீச்சாளர்களுக்கு ரிவர்ஸ் ஸ்விங் செய்வது எப்படி, இக்கட்டான சூழலில் எப்படி பந்துவீச வேண்டும் என்று தொடர்ந்து ஆலோசனைகளை வழங்கி சிறந்த வழிகாட்டியாகத் திகழ்கிறார்” என்று புகழாரம் சூட்டினார்.
தாமதமாக அணியில் இணைந்த போதிலும், நடப்புத் தொடரில் விளையாடிய 5 போட்டிகளில் 9 விக்கெட்டுகளை வீழ்த்தி டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக மிட்செல் ஸ்டார்க் உருவெடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
