நடப்பு ஐபிஎல் 2026 கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று நடைபெறும் சென்னை சூப்பர் கிங்ஸ் – சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையேயான போட்டி, வழக்கத்தை விட கூடுதல் எதிர்பார்ப்பையும் அசுர வேக உற்சாகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ப்ளே ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெற வேண்டுமெனில், மீதமுள்ள இரண்டு போட்டிகளிலும் கட்டாயம் வெற்றி பெற வேண்டிய நெருக்கடியில் உள்ளது. நடப்புத் தொடரில் சென்னை மைதானத்தில் நடைபெறும் கடைசிப் போட்டி இது என்பதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. குறிப்பாக, இந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகள் எதிலும் இதுவரை களம் இறங்காத சென்னை அணியின் அடையாளம் ‘தல’ தோனி, இன்றைய போட்டியில் களம் இறங்குவார் என்று நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஏற்கனவே தோனியின் ஓய்வு குறித்துப் பல்வேறு விவாதங்கள் எழுந்து வந்த நிலையில், இன்றைய போட்டியில் விளையாடி முடித்த பிறகு, தோனி தனது அதிகாரப்பூர்வ ஓய்வு முடிவை அறிவிக்க வாய்ப்புள்ளதாக சிஎஸ்கே தரப்பில் இருந்து செய்திகள் கசிந்துள்ளன. இதனால் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ரசிகர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது.

இன்றைய போட்டியே தோனியின் கடைசிப் போட்டியாக இருக்கலாம் என்ற தகவல் தமிழக முதல்வர் அலுவலகம் வரை எட்டியுள்ளது. இதன் காரணமாக, இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த போட்டியை நேரில் கண்டுகளிக்க முதல்வர் விஜய் விருப்பம் தெரிவித்துள்ளார். அவருடன் அவரது அமைச்சரவை சகாக்களும் போட்டியைப் பார்க்க விரும்புவதால், சேப்பாக்கம் மைதானத்தின் வி.ஐ.பி (VIP) கேலரியில் உள்ள மொத்த டிக்கெட்டுகளையும் முதல்வர் அலுவலகத் தரப்பே வாங்கியுள்ளதாகத் தெரிகிறது.

ஏற்கனவே தோனி மைதானத்திற்குள் நுழைந்தாலே விண்ணை முட்டும் அளவுக்குச் சத்தம் எழும் நிலையில், தற்போது முதல்வர் விஜய்யும் இந்த போட்டியை நேரில் காண வருவதால், சேப்பாக்கம் மைதானமே ஆரவாரத்தினால் அதிரப்போகிறது. முதல்வர் மற்றும் அமைச்சர்கள் வருகையை முன்னிட்டு, சேப்பாக்கம் மைதானம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் பாதுகாப்பு வசதிகளைப் பலப்படுத்துமாறு காவல்துறைக்கு உயர்மட்ட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.