கேரளாவில் அண்மையில் நடந்து முடிந்த தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து புதிய அரசு பொறுப்பேற்றுள்ள நிலையில், முதல்வர் வி.டி.சதீஷன் அவர்கள் அம்மாநில மக்களுக்கு இரண்டு மிக முக்கிய அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். அதன் முதலாவதாக, வரும் ஜூன் 15-ஆம் தேதி முதல் கேரள அரசுப் பேருந்துகளில் பெண்களுக்கு இலவசப் பயணம் அனுமதிக்கப்படும் என்று அறிவித்துள்ளார். தமிழகம், கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களைத் தொடர்ந்து தற்போது கேரளாவிலும் இந்த திட்டம் அமலுக்கு வரவுள்ளது அம்மாநில பெண்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அடுத்த முக்கிய திட்டமாக, இந்தியாவிலேயே முதன்முறையாக முதியோர்களின் நலனைப் பேணிப் பாதுகாப்பதற்காகத் தனித்துறை ஒன்று உருவாக்கப்படும் என்றும் முதல்வர் தெரிவித்துள்ளார். தேர்தலின் போது தங்களது கட்சி அளித்த முக்கியமான ஐந்து வாக்குறுதிகளில், ஆட்சிக்கு வந்த குறுகிய காலத்திலேயே இந்த இரண்டு முக்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளதாக வி.டி.சதீஷன் பெருமிதத்துடன் குறிப்பிட்டுள்ளார். கேரள அரசின் இந்த அடுத்தடுத்த மக்கள் நலத் திட்டங்கள் ஒட்டுமொத்த இந்திய அரசியல் வட்டாரத்திலும் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது.
