இந்தியாவின் கல்வி முறை மற்றும் மதிப்பெண் வேட்டை குறித்து பெங்களூருவில் வசிக்கும் அமெரிக்க தொழில்நுட்ப வல்லுநர் டோனி குளோர் (Tony Klor) வெளியிட்டுள்ள வீடியோ இணையத்தில் தீயாய் பரவி வருகிறது. பெங்களூரு சாலை ஓரத்தில் வைக்கப்பட்டிருந்த ஒரு விளம்பரப் பலகையில், மாணவர்கள் எடுத்த மதிப்பெண்களைப் பார்த்த டோனி அதிர்ச்சியில் உறைந்து போனார்.

அதில் மாணவர்கள் 99.3%, 99% என அசுர வேகத்தில் மதிப்பெண்களைக் குவித்திருப்பதைப் பார்த்து, “நிச்சயமாக இந்தியக் கல்வி முறையில் என்னால் தாக்குப்பிடித்திருக்கவே முடியாது” என நகைச்சுவையாகப் பதிவிட்டுள்ளார்.

“இவர்கள் வாங்கியிருக்கும் மதிப்பெண்களைப் பார்த்தால் ரேடியோ ஸ்டேஷன் எண்கள் போல இருக்கிறது. கணிதத்தில் குருவாக இருப்பார் போலிருக்கிறது” என மாணவர்களின் பெயர்களையும் மதிப்பெண்களையும் குறிப்பிட்டு அவர் கிண்டல் செய்த விதம் நெட்டிசன்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது.

அதே சமயம், இந்தியாவில் 95% எடுத்தாலே சீட் கிடைப்பது குதிரைக்கொம்பாக இருக்கும் அளவுக்கு நிலவும் கடும் போட்டி குறித்தும், இந்த மதிப்பெண் வேட்டையில் மாணவர்களின் படைப்பாற்றல் முடக்கப்படுகிறதா என்பது குறித்தும் சமூக வலைதளங்களில் பெரிய விவாதமே கிளம்பியுள்ளது.