கர்நாடகா மாநிலம் தாவணகெரே பகுதியில், பணக்கார வாலிபர்களைக் குறிவைத்து ஆசை வார்த்தை கூறி, ரகசியமாக ஆபாசப் படம் எடுத்து மிரட்டிப் பணம் மற்றும் நகைகளைப் பறித்து வந்த 2 பெண்கள் உள்ளிட்ட 5 பேர் கொண்ட ‘ஹனி டிராப்’ மோசடி கும்பலைக் காவல்துறையினர் பொறி வைத்துப் பிடித்துள்ளனர். அதாவது அந்த பகுதியை சேர்ந்த பிரபல தொழிலதிபர் ஒருவருக்கு 25 வயதில் மகன் ஒருவர் உள்ளார். இந்த வாலிபருக்கு அண்மையில் ஒரு இளம் பெண் அறிமுகமாகியுள்ளார். அந்தப் பெண் வாலிபருடன் மிக நெருக்கமாகப் பழகி வந்துள்ளார்.
சம்பவத்தன்று, தன்னுடன் தனிமையில் உல்லாசம் அனுபவிக்கலாம் என அந்த வாலிபருக்கு ஆசை வார்த்தைகளைக் கூறிய அந்தப் பெண், அவரைத் திட்டமிட்டு ஆள்நடமாட்டம் இல்லாத ஒரு வெறிச்சோடிய பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ளார். அவர்கள் இருவரும் தனிமையில் இருந்தபோது, அங்கு அந்தப் பெண்ணின் கூட்டாளிகள் திடீரென மறைந்திருந்து வந்து சூழ்ந்து கொண்டனர். அவர்கள் அந்த வாலிபரை மிரட்டி, அந்தப் பெண்ணுடன் நெருக்கமாக இருப்பது போலத் தங்களது செல்போனில் வீடியோ மற்றும் புகைப்படங்களை எடுத்துக் கொண்டனர்.
தொடர்ந்து, “நாங்கள் கேட்கும் பணத்தைக் கொடுக்காவிட்டால் இந்த வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிட்டுவிடுவோம்” என்று மிரட்டி, அந்த வாலிபரிடம் இருந்த பல லட்ச ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகளையும், ரொக்கப் பணத்தையும் பறித்துக் கொண்டனர்.
இந்தக் கொடூரச் சம்பவத்தால் நிலைகுலைந்து போன அந்த வாலிபர், துணிச்சலாகத் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், தனிப்படை அமைத்துத் தீவிர விசாரணை நடத்திய போலீசார், இந்த நூதன மோசடி கும்பலைச் சேர்ந்த 2 பெண்கள் உள்பட 4 பேரைப் பொறி வைத்துப் பிடித்தனர். விசாரணையில் அவர்கள் அதே பகுதியைச் சேர்ந்த பஞ்சமி, ஜெகதீஷ், கங்கா மல்லேஷ் நாயக் மற்றும் வெங்கடேஷ் என்பது தெரியவந்தது. இதில் பஞ்சமி என்ற பெண்ணே முதன்மையாகத் தூண்டிலாகச் செயல்பட்டு, பணக்கார வாலிபர்களைத் தனது வலையில் வீழ்த்தி, கூட்டாளிகளுடன் சேர்ந்து கொள்ளையடித்து வந்தது அம்பலமானது.
கைதானவர்களிடமிருந்து ரூ.10 லட்சத்து 50 ஆயிரம் மதிப்புள்ள 80 கிராம் தங்க நகைகள் மற்றும் இந்த மோசடிக்கு அவர்கள் பயன்படுத்திய ஒரு சொகுசு கார் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். இந்த கும்பல் ஏற்கனவே பல வாலிபர்களை இதே பாணியில் மிரட்டிப் பணம் பறித்திருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. அவர்கள் கொடுத்த கூடுதல் தகவலின் அடிப்படையில், சுரேஷ் என்பவரையும் போலீசார் கைது செய்துள்ளனர். கைதான 5 பேரிடமும் போலீசார் தற்போது தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
