நாட்டின் பொருளாதார சமநிலையை உறுதி செய்யவும், அந்நிய செலாவணி வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்தவும் பிரதமர் நரேந்திர மோடி விடுத்த கோரிக்கையை ஏற்று, டெல்லி மாநில அரசு அதிரடியான புதிய நடைமுறைகளை அமலுக்குக் கொண்டு வந்துள்ளது.

எரிபொருள் பயன்பாட்டைக் குறைக்கும் நோக்கில், டெல்லியில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் நிறுவன ஊழியர்களும் வாரத்தில் இரண்டு நாட்கள் கட்டாயம் வீட்டில் இருந்தே பணிபுரியும் (Work from Home) முறை அமல்படுத்தப்பட்டுள்ளது.

இது குறித்துப் பேசிய டெல்லி முதலமைச்சர் ரேகா குப்தா, “எனது இந்தியா, எனது பங்களிப்பு” என்ற இயக்கத்தின் கீழ் பெட்ரோல் மற்றும் டீசலைச் சேமிக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

முன்னதாகப் பேசிய பிரதமர் மோடி, எரிபொருள் மற்றும் சமையல் எண்ணெய் பயன்பாட்டைக் குறைப்பதோடு, நாட்டின் பொருளாதார நலன் கருதி பொதுமக்கள் ஓராண்டுக்குத் தங்கம் வாங்குவதைத் தவிர்க்க வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

பிரதமரின் இந்த சிக்கன நடவடிக்கைக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், மத்திய அமைச்சர்கள் மற்றும் பல மாநில முதலமைச்சர்கள் தங்களது பாதுகாப்பு வாகனங்களின் எண்ணிக்கையைக் குறைத்தும், இருசக்கர வாகனங்களில் பயணித்தும் முன்னுதாரணமாகத் திகழ்ந்து வருகின்றனர்.