பீகார் மாநிலம் பாட்னாவில், திருமணமான பெண்கள் கணவனின் நீண்ட ஆயுளுக்காக ஆல மரத்தடியில் விளக்கேற்றி கூட்டு வழிபாடு நடத்தியபோது, எதிர்பாராத விதமாக மரம் முழுவதும் தீப்பற்றி எரிந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவின் வட மாநிலங்களில் வாழும் திருமணமான பெண்கள், தங்களது குடும்பத்தின் சுபிட்சத்திற்காகவும், கணவனின் நீண்ட ஆயுளுக்காகவும் ஆண்டுதோறும் ஒரு  பாரம்பரிய விரதத்தைக் கடைப்பிடித்து வருகின்றனர். ஜேஷ்ட அமாவாசை தினத்தில் பெண்கள் நாள் முழுவதும் விரதம் இருந்து, ஆல மரத்தடியில் விளக்கேற்றி, சாவித்ரி தேவியை  பூஜிப்பது வழக்கமாகும். அந்த வகையில், நடப்பாண்டின் ஜேஷ்ட அமாவாசை தினமான நேற்று, ஏராளமான பெண்கள் இந்த வழிபாட்டை மேற்கொண்டனர்.

பீகார் மாநிலம் பாட்னாவின் பதுகா தாலுகா பகுதியில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க மிகவும் பழமையான ஆலமரம் ஒன்றின் அடியில், நேற்று நூற்றுக்கணக்கான பெண்கள் ஒன்று திரண்டனர். அவர்கள் மரத்தடியில் விளக்குகளை ஏற்றி, மரத்தின் விழுதைச் சுற்றி காட்டன் (பருத்தி) நூல்களைக் கட்டி தங்களது பிராத்தனைகளைச் செலுத்தினர்.

அப்போது, எதிர்பாராத விதமாக விளக்கில் இருந்த நெருப்பு, மரத்தைச் சுற்றி சுற்றப்பட்டிருந்த காட்டன் நூலில் பற்றியது. மரத்தின் தண்டு மற்றும் விழுதுகளைச் சுற்றி மிக நெருக்கமாகவும், அதிக அளவிலும் நூல்கள் சுற்றப்பட்டிருந்ததால், தீ அடுத்த சில விநாடிகளிலேயே மளமளவென மரம் முழுவதும் பரவி, கொழுந்துவிட்டு எரியத் தொடங்கியது.

 


அடர்ந்த விழுதுகளும், காய்ந்த கிளைகளும் தீக்கிரையானதால், அந்த இடமே அக்னிக் குண்டம் போலக் காட்சியளித்தது. இதனால் பெரும் பயமும், பதற்றமும் அடைந்த பெண்கள், தங்களின் பூஜாப் பொருட்களை அப்படியே போட்டுவிட்டு அலறியடித்தபடி அங்கிருந்து பாதுகாப்பான இடங்களுக்கு ஓடினர். இந்த அதிர்ச்சியூட்டும் தீ விபத்து தொடர்பான வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.

இந்த வீடியோவைப் பார்த்த இணையவாசிகள் பலரும் தங்களது வேதனையையும், கடுமையான கண்டனங்களையும் பதிவு செய்து வருகின்றனர். “சற்று நேரத்திற்கு முன்புதான் தங்களுக்கு ஆசி வழங்க வேண்டும் என்று அந்தப் பழமையான மரத்தை தெய்வமாக வழிபட்டார்கள்; ஆனால், அது தீப்பற்றி எரியும்போது அதைக் கட்டுப்படுத்த முனையாமல், தூர நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்” எனப் பலரும் தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளனர். வழிபாட்டுத் தலங்களில் தீபங்களை ஏற்றி வைக்கும்போது பொதுமக்களுக்கு கூடுதல் விழிப்புணர்வு தேவை என்பதை இச்சம்பவம் உணர்த்தியுள்ளது.