அமெரிக்காவின் ஜார்ஜியா மாநிலத்தில், தான் பாடம் நடத்தும் உயர்நிலைப் பள்ளி மாணவனுக்கு இரண்டு முறை பாலியல் தொல்லை கொடுத்ததாக 25 வயது இளம் பெண் ஆசிரியை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அந்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது அமெரிக்காவின் டக்ளஸ்வில்லே என்ற இடத்தில் ‘அலெக்சாண்டர் உயர்நிலைப் பள்ளி’ இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் மேரிஸ் நிக்கோல்ஸ் (25) என்ற பெண், உயிரியல் ஆசிரியையாகப் பணியாற்றி வந்தார்.

இவர், அதே பள்ளியில் படிக்கும் மாணவர் ஒருவருக்கு, கடந்த இரண்டு வார காலத்தில் இரண்டு முறை பாலியல் ரீதியான தொல்லைகளைக் கொடுத்துள்ளதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து அங்குள்ள காவல்துறை மற்றும் நீதிமன்ற வாரண்டுகளில் அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

காவல்துறை அறிக்கையின்படி, கடந்த ஏப்ரல் 23-ஆம் தேதி தான் பணியாற்றும் அலெக்சாண்டர் உயர்நிலைப் பள்ளியின் ஒரு வகுப்பறை அலமாரிக்குள்ளும், பின்னர் மே 2-ஆம் தேதி ஒரு குடியிருப்புப் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த காரினுள்ளும் அந்த மாணவருடன் ஆசிரியை உடலுறவு வைத்ததாக  குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மாணவர்களைக் கண்காணிக்கும் மற்றும் கட்டுப்படுத்தும் அதிகாரத்தில் இருந்துகொண்டே இந்த அத்துமீறலில் அவர் ஈடுபட்டதால், அவர் மீது இரண்டு கடுமையான பாலியல் பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, அவர் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட ஆசிரியை மேரிஸ் நிக்கோல்ஸ் டடி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். வழக்கை விசாரித்த நீதிபதி அவருக்கு 40,000 அமெரிக்க டாலர்கள் (சுமார் 33 லட்சம் இந்திய ரூபாய்) பிணைத் தொகையாக நிர்ணயித்தார். டக்ளஸ் கவுண்டி சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவர், பிணைத் தொகையைச் செலுத்தியதைத் தொடர்ந்து தற்போது தற்காலிகமாக விடுவிக்கப்பட்டுள்ளார்.

ஆசிரியை கைது செய்யப்படுவதற்கு ஒரு நாளுக்கு முன்பே, பள்ளி நிர்வாகம் இச்சம்பவம் குறித்து மாணவர்களின் பெற்றோருக்கு முறைப்படி அறிவிப்பு அனுப்பியது. மேலும், உள்ளூர் போலீசார் பள்ளி வளாகத்திற்கு நேரடியாகச் சென்று அங்கிருந்த சாட்சிகளிடம் விசாரணை நடத்தினர். இதுகுறித்து பள்ளி நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “எங்கள் பள்ளியோடு தொடர்புடைய நபர் ஒருவர் மீது சுமத்தப்பட்டுள்ள இந்தக் குற்றச்சாட்டுகள் எங்களை மிகவும் வேதனைக்குள்ளாக்கியுள்ளன. சம்பவம் தெரிந்தவுடனேயே நிர்வாகம் சார்பில் விரிவான விசாரணை தொடங்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விசாரணையைத் தொடர்ந்து, பள்ளியின் அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கத்திலிருந்து ஆசிரியை மேரிஸின் புகைப்படம், பெயர் மற்றும் விவரங்கள் உடனடியாக நீக்கப்பட்டுள்ளன. அவர் நிரந்தரமாகப் பணியில் இருந்து நீக்கப்பட்டாரா என்பது குறித்துப் பள்ளி நிர்வாகம் தற்போதைக்குக் கூடுதல் தகவல்களை வெளியிட மறுத்துவிட்டது. இந்த விவகாரம் தொடர்பாகத் தொடர்ந்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.