ஹரியானா மாநிலம் ஃபரிதாபாத்தில் உள்ள செக்டர் 3 அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், மருத்துவமனை ஊழியர்களின் அலட்சியத்தால் கர்ப்பிணிப் பெண் ஒருவர் பூங்காவிலேயே பிரசவிக்கும் அவலம் அரங்கேறியுள்ளது. படோலி கிராமத்தைச் சேர்ந்த பாலேஷ் என்ற பெண்ணிற்கு நள்ளிரவில் பிரசவ வலி ஏற்பட்டதை அடுத்து, அவரது குடும்பத்தினர் அதிகாலை சுமார் 1:40 மணியளவில் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். ஆனால், மருத்துவமனையின் முதன்மை நுழைவாயில் பூட்டப்பட்டிருந்ததோடு, உள்ளே இருந்த ஊழியர்களும் இவர்களின் உதவிக்குரலுக்கு செவிசாய்க்கவில்லை.

மேலும் மாற்று வழியைத் தேடி மருத்துவமனையின் பின்புற கதவு வழியாக உள்ளே சென்றபோதும், அங்கிருந்த மருத்துவர்களோ அல்லது செவிலியர்களோ உதவ முன்வரவில்லை. இதனால் வேறு வழியின்றி, மொபைல் போன் டார்ச் லைட் வெளிச்சத்தில், குடும்பத்தினரின் உதவியோடு அந்தப் பெண் மருத்துவமனை வளாகத்தில் உள்ள பூங்காவிலேயே தனது மூன்றாவது ஆண் குழந்தையைப் பெற்றெடுத்துள்ளார்.

இந்த அதிர்ச்சியூட்டும் சம்பவம் பொதுமக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியதை அடுத்து, சுகாதாரத் துறை மற்றும் ஹரியானா தேசிய சுகாதார இயக்கம் உடனடியாக விசாரணைக்கு உத்தரவிட்டது. முதற்கட்ட விசாரணையில், இரவுப் பணியில் இருந்த ஊழியர்களின் கடுமையான அலட்சியம் உறுதி செய்யப்பட்டதை அடுத்து, இதில் தொடர்புடைய இரண்டு ஊழியர்கள் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

மேலும், இனிவரும் காலங்களில் மருத்துவமனையின் அனைத்து நுழைவாயில்களும் எப்போதும் திறந்திருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இத்தகைய அவசர நிலைகளைத் துல்லியமாகக் கண்காணிக்கவும், கர்ப்பிணிகளுக்குத் தேவையான மருத்துவ உதவிகள் உடனுக்குடன் கிடைப்பதை உறுதி செய்யவும் அடுத்த ஓரிரு மாதங்களில் மாநில அளவில் ஒரு பிரத்யேக “வார் ரூம்” அமைக்கப்படும் என்றும் அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.