தலைமைச் செயலகத்தில் அமைச்சர் ராஜ்மோகனைச் சந்தித்த இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனா, பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், “முதலமைச்சர் விஜய்யை நேரில் சந்திப்பேன் என்ற நம்பிக்கை எனக்கு ஆரம்பத்தில் இருக்கவில்லை; விஜய் தமிழக முதல்வராகப் பொறுப்பேற்கும் அந்த வரலாற்றுத் தருணத்தைக் நேரில் பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன்.
ஆனால், அப்போது இலங்கை நாடாளுமன்றக் கூட்டத்தொடர் இருந்ததால் என்னால் வர முடியவில்லை” என்று தனது ஆதங்கத்தைப் பகிர்ந்து கொண்டார்மேலும், தமிழக மக்கள் வரலாறு காணாத ஒரு மிகப்பெரிய அரசியல் மாற்றத்திற்காக இந்தத் தேர்தலில் வாக்களித்திருப்பதாக அவர் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.
தொடர்ந்து பேசிய ராமநாதன் அர்ச்சுனா, தமிழகத்தில் இப்படி ஒரு அரசியல் மாற்றம் நடக்கவே நடக்காது என்று பெரிய அரசியல் விற்பன்னர்கள் கூறி வந்த நிலையில், அது நிச்சயம் நடக்கும் என்று தான் முன்பே கூறி வந்ததாகத் தெரிவித்தார். ஈழத்தமிழர் விவகாரம் குறித்துப் பேசிய அவர், “எங்கள் இனம் அழியும் போது இங்கு ஆட்சி செய்த திமுக, அதிமுக அரசுகள் வேடிக்கை மட்டுமே பார்த்தன;
நாம்தமிழர் கட்சியின் சீமான், வெறும் ஓட்டு வாங்குவதற்காக மட்டுமே ஈழத்தமிழர் பிரச்சினையைப் பேசினார்” என்று அதிரடியாகக் குற்றம் சாட்டினார். இனிவரும் காலங்களில் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக முதலமைச்சர் விஜய் குரல் கொடுக்க வேண்டும் என்றும், விஜய்யின் மக்கள் சேவை என்பது உலகெங்கும் வாழும் தமிழ் பேசும் ஒட்டுமொத்த மக்களுக்கும் தேவை என்றும் அவர் உருக்கமாகக் கேட்டுக்கொண்டார்.
