மும்பை அருகே உள்ள உல்லாஸ்நகரில், கோவிலுக்குள் நுழைய முயன்ற பெண் ஒருவரை ஒரு கும்பல் கொடூரமாகத் தாக்கி, அவரது முடியை வெட்டி, செருப்பு மாலை அணிவித்து, நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக இழுத்துச் சென்ற அதிர்ச்சிச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவி நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாகப் பாதிக்கப்பட்ட பெண்ணின் உறவினர்கள் 3 பேரை காவல்துறையினர் அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.
காவல்துறையினரின் முதற்கட்ட விசாரணையில், பாதிக்கப்பட்ட பெண்ணும், இந்த கொடூரச் செயலில் ஈடுபட்ட குற்றம் சாட்டப்பட்டவர்களும் நெருங்கிய உறவினர்கள் என்பது தெரியவந்துள்ளது. இவர்களுக்குள் நீண்ட நாட்களாகக் குடும்ப ரீதியான முன்விரோதம் இருந்து வந்துள்ளது. ஏற்கனவே பாதிக்கப்பட்ட அந்தப் பெண்ணுக்கு எதிராக, அவரது உறவினர்கள் காவல் நிலையத்தில் சில புகார்களை அளித்திருந்ததாகவும் கூறப்படுகிறது.
கடந்த வியாழக்கிழமை தங்களது குலதெய்வக் கோவிலுக்கு அந்தப் பெண் சாமி கும்பிடச் சென்றுள்ளார். அப்போது அங்கு வந்த அவரது உறவினர்கள், “நீ எங்கள் குலதெய்வங்களை இழிவுபடுத்திப் பேசியவள், அதனால் உனக்குக் கோவிலுக்குள் நுழைய உரிமை இல்லை” எனக் கூறி அவரைத் தடுத்து நிறுத்தியுள்ளனர். இதில் இருதரப்புக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஆத்திரத்தின் உச்சக்கட்டத்திற்குச் சென்ற உறவினர்கள் மற்றும் அவர்களது ஆதரவாளர்கள், அந்தப் பெண்ணை மிருகத்தனமாகத் தாக்கியுள்ளனர். மேலும், அவரது கூந்தலை வெட்டி, செருப்பு மாலை அணிவித்ததோடு மட்டுமன்றி, ஆடைகளைக் கிழித்து நிர்வாணமாக்கிப் பொதுவெளியில் ஊர்வலமாக இழுத்துச் சென்று சித்திரவதை செய்துள்ளனர்.
இந்த கொடூரச் சம்பவத்தை அங்கிருந்த சிலர் தங்களது மொபைல் போன்களில் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட, அது காட்டுத்தீயாகப் பரவியது. வீடியோவைக் கண்டு அதிர்ச்சியடைந்த போலீசார், உடனடியாகத் தானாக முன்வந்து வழக்குப் பதிவு செய்து விசாரணையை முடுக்கிவிட்டனர்.
பாதிக்கப்பட்ட பெண்ணின் புகாரின் பேரில், இக்கொடூரச் செயலில் ஈடுபட்ட அவரது உறவினர்கள் 3 பேரை போலீசார் உடனடியாகக் கைது செய்தனர். மேலும், இந்த வழக்கில் தொடர்புடைய, தற்போது தலைமறைவாக உள்ள மேலும் 4 பேரை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
