கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த உயர் போலீஸ் அதிகாரியின் மகளான சாயாதேவி, ‘மிஸ் பெங்களூரு’ பட்டம் வென்றவர். நடிகர் சரத்குமாரைக் காதலித்துத் திருமணம் செய்துகொண்ட இவருக்கு வரலட்சுமி, பூஜா என இரு பெண் குழந்தைகள் உள்ளனர். பின்னர் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாகச் சரத்குமாரைப் பிரிந்த சாயாதேவி, அதன் பிறகு மறுமணம் செய்து கொள்ளாமல் தன் குழந்தைகளுக்காக வாழ்ந்து, தற்போது சமூக சேவையில் ஈடுபட்டு வருகிறார்.

இதற்கிடையே சரத்குமார் நடிகை ராதிகாவை இரண்டாவதாகத் திருமணம் செய்து கொண்டார். சமீபத்தில் நடந்த வரலட்சுமியின் திருமணத்தில் அனைவரும் ஒரே குடும்பமாக இணைந்திருந்த நிலையில், தற்போது தனது தாயின் மறுமணம் குறித்து வரலட்சுமி பேசியிருப்பது இணையத்தில் வைரலாகி வருகிறது.

யூடியூப் சேனல் நேர்காணல் ஒன்றில் பேசிய வரலட்சுமி, தனக்கு 8 வயதாக இருந்தபோது தன் தங்கை பூஜா பிறக்கும் சமயத்தில்தான் பெற்றோரின் விவாகரத்து நடந்ததாகக் குறிப்பிட்டுள்ளார். சிறு வயது முதலே குடும்பப் பிரச்சினைகளைப் பார்த்து வளர்ந்ததால், உறவுகள் மீது தனக்கு அதிக ஒட்டல் இருந்ததில்லை என்றும் கூறியுள்ளார்.

தன் தாயிடம் தாராளமாக இரண்டாவது திருமணம் செய்து கொள்ளும்படி பலமுறை வற்புறுத்தியும், தனக்கு அதில்விருப்பமில்லை என்று சாயாதேவி திட்டவட்டமாகக் கூறிவிட்டதாகத் தெரிவித்துள்ளார்.

மேலும், சமூக வலைதளங்களில் வரும் முகம் தெரியாத நபர்களின் எதிர்மறை விமர்சனங்கள் குறித்தோ, நெகட்டிவ் கமெண்ட்ஸ் குறித்தோ தனக்கு எவ்விதக் கவலையும் இல்லை என்றும், தைரியம் இருந்தால் நேரில் வந்து பேசட்டும் என்றும் வரலட்சுமி அதிரடியாகப் பேசியுள்ளார்.