அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மேற்கொண்டுள்ள சீனப் பயணத்தில், இரு நாடுகளுக்கும் இடையே பில்லியன் டாலர் மதிப்பிலான வர்த்தக ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. இரு நாட்டுத் தலைவர்களும் ஒருவரையொருவர் பாராட்டிப் பேசிக்கொண்டாலும், பீஜிங் விமான நிலையத்தில் நடந்த ஒரு அதிர்ச்சி சம்பவம், இரு நாடுகளுக்கும் இடையே உள்ள ஆழமான அவநம்பிக்கையை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.

அதிபர் டிரம்பின் சிறப்பு விமானமான ‘ஏர் ஃபோர்ஸ் ஒன்’ (Air Force One) சீனாவிலிருந்து புறப்படுவதற்கு சற்று முன்பாக, அமெரிக்க தூதுக்குழுவினர் தங்களுக்கு சீன அரசு வழங்கிய அனைத்துப் பரிசுகள், அடையாள பேட்ஜ்கள் மற்றும் தற்காலிக அலைபேசிகளை விமான நிலையத்திலேயே குப்பையில் வீசி எறிந்துள்ளனர்.

பிரபல அமெரிக்க அரசியல் பத்திரிகையாளர் எமிலி குடின் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் (எக்ஸ் தளம்) பக்கத்தில் இதனை உறுதிப்படுத்தியுள்ளார். சீன அதிகாரிகளால் வழங்கப்பட்ட எந்தவொரு பொருளும் அதிபரின் விமானத்திற்குள் கொண்டு செல்லப்படக் கூடாது என்பதில் அமெரிக்க பாதுகாப்பு அமைப்புகள் மிகத் தீவிரமாக இருந்ததே இதற்குக் காரணம்.

 

சீன அரசு வழங்கிய பரிசுகள் அல்லது மின்னணு சாதனங்களுக்குள் இருப்பிடத்தைக் கண்டறியும் டிராக்கிங் சிப்கள் அல்லது உளவு பார்க்கும் மென்பொருட்கள்மறைத்து வைக்கப்பட்டிருக்கலாம் என அமெரிக்கா சந்தேகிக்கிறது. சீனாவின் அதிநவீன சைபர் உளவுத் திறனைக் கருத்தில் கொண்டு, அமெரிக்க பாதுகாப்புப் படையினர் எவ்வித ஆபத்தையும் எதிர்கொள்ளத் தயாராக இல்லை. இப்பயணத்தின் போது, அமெரிக்கப் பிரதிநிதிகள் தங்களது சொந்த அலைபேசிகளைப் பயன்படுத்தவும் தடை விதிக்கப்பட்டது. அவர்களுக்கு தற்காலிகமாக வழங்கப்பட்ட ‘பர்னர் போன்கள்’ பயணம் முடிந்ததும் அழிக்கப்பட்டன.

அமெரிக்கப் பிரதிநிதிகளின் தனிப்பட்ட அலைபேசிகள் விமானத்திற்குள் கொண்டு செல்லப்பட்டபோது, அவை ‘பாரடே பைகளில்’  வைத்துப் பூட்டப்பட்டன. இந்த பைகள் அனைத்து வகையான மின்காந்த அலைகளையும் தடுத்து நிறுத்தக் கூடியவை. இதனால் அலைபேசிகளை ஹேக் செய்வதோ அல்லது உளவு பார்ப்பதோ சாத்தியமற்றதாகிறது. சீன மண்ணில் பெறப்பட்ட ஒரு சிறிய ஊசி கூட, தங்களது அதிநவீன விமானப் பாதுகாப்பு அமைப்பிற்கு அச்சுறுத்தலாக மாறலாம் என அமெரிக்கா கருதுகிறது.

ஒருபுறம் டொனால்ட் டிரம்பும், ஷி ஜின்பிங்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க வர்த்தக ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுக் கொண்டாலும், மறுபுறம் தேசியப் பாதுகாப்பு என்று வரும்போது சீனா மீது அமெரிக்கா எள்முனையளவும் நம்பிக்கை வைக்கத் தயாராக இல்லை என்பதை இந்தச் சம்பவம் உலகிற்கு உணர்த்தியுள்ளது.