அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் சமீபத்திய சீனா சுற்றுப்பயணத்திற்குப் பிறகு, சமூக வலைத்தளங்களிலும் பல்வேறு ஊடகங்களிலும் ஒரு அதிர்ச்சியூட்டும் தகவல் வெளியாகியுள்ளது. சீன அதிகாரிகள் வழங்கிய பரிசுகள், அடையாள அட்டைகள், சிறப்புப் பதக்கங்கள் மற்றும் தற்காலிகமாகப் பயன்படுத்தப்பட்ட கைபேசிகள் உள்ளிட்ட அனைத்துப் பொருட்களையும், அமெரிக்கப் பிரதிநிதிகள் குழுவினர் அதிபரின் ‘ஏர் ஃபோர்ஸ் ஒன்’ விமானத்தில் ஏற்றுவதற்கு முன்பாக, அங்கிருந்த குப்பைத் தொட்டியில் வீசியெறிந்துள்ளனர்.

மேலும் சைபர் உளவுவேலை மற்றும் மின்னணு கண்காணிப்பு குறித்த அச்சத்தின் காரணமாகவே அமெரிக்கப் பாதுகாப்பு அமைப்புகளின் கடுமையான அறிவுறுத்தலின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. எமிலி குடின் என்ற பத்திரிகையாளர் தனது எக்ஸ் தளத்தில், அதிபரின் விமானப் படிக்கட்டுகளுக்குக் கீழே இருந்த குப்பைத் தொட்டியில் இப்பொருட்கள் வீசப்பட்டதை உறுதிப்படுத்தியுள்ளார், இது தொடர்பான வீடியோக்களும் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.

இதனால் தொழில்நுட்பப் பாதுகாப்பு மற்றும் தரவு திருட்டைத் தவிர்ப்பதற்காக, சீனப் பயணத்தின் போது அமெரிக்கப் பிரதிநிதிகள் தங்களின் தனிப்பட்ட மின்னணு சாதனங்களைப் பயன்படுத்த வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டதோடு, அதற்குப் பதிலாக தற்காலிக “பர்னர் போன்கள்” வழங்கப்பட்டதாகத் தெரிகிறது.

மேலும், அதிகாரிகளின் தனிப்பட்ட போன்கள் மின்காந்த அலைகளைத் தடுத்துக் கண்காணிப்பை முடக்கும் சிறப்பு வாய்ந்த “ஃபாரடே பைகளில்” பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தன. இந்தச் சம்பவம் குறித்து அமெரிக்க அரசுத் தரப்பில் அதிகாரப்பூர்வ விளக்கம் எதுவும் அளிக்கப்படவில்லை என்றாலும், அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையே பல ஆண்டுகளாக நிலவி வரும் தொழில்நுட்பப் போர் மற்றும் பரஸ்பர அவநம்பிக்கையின் தீவிரத்தை இந்த அதிரடி நடவடிக்கை மீண்டும் உலக அரங்கில் வெளிச்சம்போட்டுக் காட்டியுள்ளது.