அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் சீன அதிபர் ஷி ஜின்பிங் இடையேயான உயர்மட்ட தூதரகப் பேச்சுவார்த்தை சீனாவின் ‘கிரேட் ஹால் ஆஃப் தி பீப்பிள்’ (Great Hall of the People) மாளிகையில் நடைபெற்றது. இந்தச் சந்திப்பின் போது, அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ அங்கிருந்த கூரையின் வடிவமைப்பை வியப்புடன் பார்த்த வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி விவாதப் பொருளாக மாறியுள்ளது.

இரு நாட்டுத் தலைவர்களும் தீவிரமான பிராந்தியப் பாதுகாப்பு மற்றும் வர்த்தகப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருந்த தருணத்தில், மார்கோ ரூபியோ அங்கிருந்த மாளிகையின் பிரம்மாண்டமான மற்றும் கலைநயம் மிக்க கூரையை  அண்ணாந்து பார்த்தபடி கவனித்தார். தூதரக நெறிமுறைகளுக்கு மத்தியில் அவர் உலக அழகை ரசிப்பது போன்ற இந்தத் தருணம் கேமராவில் பதிவாகி இணையத்தில் காட்டுத்தீயாய் பரவியது.

இந்த வீடியோவை வைத்துப் பல பயனர்கள் மார்கோ ரூபியோவைக் கிண்டல் செய்து வருகின்றனர். “இந்த மனிதர் உலகத் தரம் வாய்ந்த கட்டிடக்கலையை இப்போதுதான் முதல்முறையாகப் பார்க்கிறார் போல, பாவம்!” என்றும், “முக்கியமான தூதரகக் கூட்டத்திற்கு வந்துவிட்டு, முதல்முறை விமான நிலையத்திற்கு வந்த சுற்றுலாப் பயணியைப் போலக் கூரையைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்” என்றும் நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர்.

அதே நேரத்தில், அவருக்கு ஆதரவாகவும் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். “புதிய மற்றும் அறிமுகமில்லாத இடங்களின் அழகைக் கண்டு வியப்பது மனித இயல்பு. இதில் தவறு காண என்ன இருக்கிறது? உங்கள் மேட்டிமைத் தனத்தைக் காட்டி விவாதிக்க வேண்டாம்” என்று மார்கோ ரூபியோவின் ஆர்வத்தை நியாயப்படுத்திப் பதிவிட்டுள்ளனர்.

கடந்த 2020-ஆம் ஆண்டு முதல் சீனா விதித்த தடை பட்டியலில் இருந்தபோதிலும், இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க பயணத்தில் டிரம்ப் குழுவுடன் மார்கோ ரூபியோவும் பங்கேற்றுள்ளார். இந்த 2 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த கூட்டத்தில், தைவான் விவகாரம், ஈரான் போர், சர்வதேச எரிசக்தி ஸ்திரத்தன்மை மற்றும் கடல்சார் பாதுகாப்பு உள்ளிட்ட மிக முக்கியமான உலகளாவிய பிரச்சினைகள் குறித்து இரு நாட்டு அதிபர்களும் விவாதித்தது குறிப்பிடத்தக்கது.