சென்னை பனையூர் ஆதித்யாராம் பிலிம் சிட்டியில் நடைபெற்று வரும் நடிகர் ரஜினிகாந்தின் ‘ஜெயிலர் 2’ திரைப்படப் படப்பிடிப்பில், எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கி வாலிபர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சேலத்தைச் சேர்ந்த கார்த்திகேயன் (28) என்ற EEE பட்டதாரி இளைஞர், படப்பிடிப்புத் தளத்தில் வீடு போன்ற செட் ஒன்றில் மின்விசிறி அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது திடீரென அவர் மீது மின்சாரம் பாய்ந்ததில் தூக்கி வீசப்பட்டார். அருகில் இருந்தவர்கள் உடனடியாக அவரை மீட்டு பனையூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.
ஆனால், அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். தகவலறிந்து வந்த கானத்தூர் போலீஸார் கார்த்திகேயனின் உடலைக் கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
கார்த்திகேயனின் மரணச் செய்தியைக் கேட்டு அவரது குடும்பத்தினர் கதறி அழுது, இந்த விபத்து குறித்துச் சரியான விசாரணை நடத்த வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இயக்குநர் நெல்சன் இயக்கத்தில், சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவான ஜெயிலர் முதல் பாகம் மிகப்பெரிய வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, இதன் இரண்டாம் பாகப் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வந்த நிலையில், சிலரது அலட்சியத்தால் படப்பிடிப்புத் தளங்களில் இதுபோன்ற உயிரிழப்புகள் தொடர்வதாக ரசிகர்கள் சமூக வலைதளங்களில் தங்களது கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றனர்.
