அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் சீன அதிபர் ஷி ஜின்பிங் இடையே நடைபெற்ற இரண்டு மணி நேரப் பேச்சுவார்த்தையில், தைவான் விவகாரம் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. ஈரானில் நிலவி வரும் பதற்றமான சூழல் மற்றும் அமெரிக்கா – சீனா இடையிலான வர்த்தகப் போருக்கு மத்தியில், அதிபர் டிரம்பின் இந்தச் சீனப் பயணம் சர்வதேச அளவில் உற்றுநோக்கப்படுகிறது. பயணத்தின் தொடக்கத்தில் ஷி ஜின்பிங்கை “சிறந்த நண்பர்” என்று டிரம்ப் அழைத்த போதிலும், பேச்சுவார்த்தையின் போது ஷி ஜின்பிங் மிகவும் கறாரான போக்கையே கடைப்பிடித்தார்.
சீன அரசு ஊடகமான CCTV வெளியிட்டுள்ள தகவலின்படி, அமெரிக்காவுடனான உறவில் சீனா ஒரு தெளிவான “சிவப்பு கோட்டை” வரைந்துள்ளது. “தைவான் விவகாரம்தான் சீனா – அமெரிக்கா உறவின் அடிப்படை. இதில் அமெரிக்கா ஏதேனும் தவறு செய்தால் அல்லது தலையிட்டால், இரு நாடுகளும் நேரடி மோதல் சூழ்நிலைக்குத் தள்ளப்படும். இது இருவருக்குமே பெரிய விலையைக் கொடுக்கும்” என்று ஷி ஜின்பிங் டிரம்பிடம் நேரடியாகத் தெரிவித்துள்ளார்.
தைவானைத் தனது நாட்டின் ஒரு பகுதியாகவே சீனா கருதி வரும் நிலையில், அமெரிக்கா நீண்டகாலமாக தைவானுக்கு ராணுவ ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் ஆதரவு அளித்து வருகிறது. அண்மையில் தைவானுக்கு அமெரிக்கா வழங்கிய 11 பில்லியன் டாலர் மதிப்பிலான ஆயுத ஒப்பந்தம் சீனாவை மேலும் கோபமடையச் செய்துள்ளது. “தைவான் ஜலசந்தி அமைதியாக இருக்க வேண்டும் என்றால், அமெரிக்கா இந்தப் பிரச்சினையில் இருந்து விலகி இருக்க வேண்டும்” என்பதே சீனாவின் முக்கிய நிபந்தனையாக உள்ளது.
ஆனாலும், உலக அமைதிக்கும் சிறந்த எதிர்காலத்திற்கும் அமெரிக்கா – சீனா இடையிலான உறவு அவசியம் என்று டிரம்ப் சுட்டிக்காட்டினார். இதற்குப் பதிலளித்த ஷி ஜின்பிங், இரு நாடுகளும் போட்டியாளர்களாக இல்லாமல் கூட்டாளிகளாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். இருப்பினும், தைவான் விவகாரத்தில் அமெரிக்காவின் அடுத்தகட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும் என்பதைப் பொறுத்தே இந்த உறவின் எதிர்காலம் அமையும் எனத் தெரிகிறது.
