அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், சீனாவுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், அவரை வரவேற்க நின்றிருந்த சீன ராணுவ அதிகாரி ஒருவரின் அபாரமான ஒழுக்கக் கட்டுப்பாடு இணையத்தில் வைரலாகி வருகிறது.

கடந்த புதன்கிழமை அமெரிக்க அதிபர் பயணிக்கும் ‘ஏர்ஃபோர்ஸ் ஒன்’ விமானம் பெய்ஜிங் விமான நிலையத்தின் தார்சாலையில் தரையிறங்கி மெதுவாக நகர்ந்து கொண்டிருந்தது. அந்த மிகப்பெரிய போயிங் விமானத்தின் என்ஜின் மிக அருகாமையில் இருந்தபோதிலும், அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த சீன ராணுவ அதிகாரி ஒருவர், ஒரு மில்லிமீட்டர் கூட அசையாமல், சிலை போல நேராக நின்று கொண்டிருந்தார்.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியான சில நிமிடங்களிலேயே லட்சக்கணக்கான பார்வைகளைப் பெற்றது. “இவ்வளவு பெரிய விமானம் அருகில் வரும்போது ஒரு சிறு அசைவு கூட இல்லாமல் நிற்பது மிகப்பெரிய பயிற்சி” எனப் பலர் பாராட்டி வருகின்றனர். “என் அருகில் அந்த என்ஜின் வந்திருந்தால் என் கால்கள் நடுங்கியிருக்கும்” எனச் சிலர் வேடிக்கையாகவும் பதிவிட்டுள்ளனர்.

 

 

ஈரான் போர் காரணமாகத் தள்ளிப்போன அதிபர் டிரம்பின் இந்தச் சீனப் பயணம் தற்போது நடைபெற்று வருகிறது. அவருடன் டெஸ்லா சி.இ.ஓ இலான் மஸ்க் மற்றும் என்விடியா சி.இ.ஓ ஜென்சன் ஹுவாங் உள்ளிட்ட முக்கியத் தொழில் அதிபர்களும் சென்றுள்ளனர். சீன துணை அதிபர் ஹான் ஜெங், டிரம்பை விமான நிலையத்திற்கு நேரில் வந்து வரவேற்றார்.

தைவான் விவகாரம், வர்த்தகப் போர் மற்றும் ஈரான் போர் பதற்றங்களைத் தணிப்பது குறித்து டிரம்ப் மற்றும் ஷி ஜின்பிங் இடையே பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வரும் நிலையில், இந்த ராணுவ வீரரின் வீடியோ அந்தப் பயணத்தின் ஒரு சுவாரஸ்யமான அங்கமாக மாறியுள்ளது.