பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த ஓய்வுபெற்ற ராணுவ வீரர் குர்பிரீத் சிங், வெறும் 26 மணி நேர இடைவெளியில் மூன்று பேரைக் கொடூரமாகச் சுட்டுக்கொன்றுவிட்டு, தப்ப முயன்றபோது போலீஸ் என்கவுன்ட்டரில் பலியானார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை ரயிலில் பயணித்த பீகாரைச் சேர்ந்த ஒருவரைச் சுட்டுக்கொன்ற அவர், அடுத்தடுத்து சகல்திஹா ரயில் நிலையம் அருகே ஒருவரையும், சந்தவுலி தனியார் மருத்துவமனையில் ஒரு பெண் நோயாளியையும் துப்பாக்கியால் சுட்டுத் தீர்த்துக்கட்டியுள்ளார்.
ராணுவ வீரராக இருந்த ஒருவரே தொடர் கொலைகளில் ஈடுபட்ட இந்தச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. தொடர் கொலைகளுக்குப் பிறகு பொதுமக்களிடம் சிக்கிய குர்பிரீத் சிங்கை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
நேற்று இரவு கொல நடந்த இடங்களுக்கு அவரை அழைத்துச் சென்று விசாரணை நடத்தியபோது, திடீரென போலீஸ்காரரின் துப்பாக்கியைப் பறித்து அதிகாரிகளை நோக்கி அவர் சுட ஆரம்பித்தார். போலீசார் தற்காப்பிற்காக நடத்திய பதில் தாக்குதலில் குர்பிரீத் சிங் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இந்த மோதலில் மூன்று போலீசார் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த என்கவுன்ட்டர் சம்பவம் தற்போது பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது.
