சமாஜ்வாதி கட்சியின் நிறுவனரும், மறைந்த முன்னாள் முதலமைச்சருமான முலாயம் சிங் யாதவின் இளைய மகன் பிரதீக் யாதவ் (38), உடல்நலக்குறைவு காரணமாக லக்னோவில் காலமானார். கடந்த சில மாதங்களாகவே உடல்நலப் பாதிப்பால் சிகிச்சை பெற்று வந்த அவர், இடையில் குணமாகி வீடு திரும்பியிருந்தார்.
ஆனால், இன்று அதிகாலை மீண்டும் உடல்நிலை மோசமடைந்ததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அரசியலில் இருந்து விலகி இருந்த போதிலும், முலாயம் சிங்கின் மகன் என்பதாலும், பாஜகவைச் சேர்ந்த அபர்ணா யாதவின் கணவர் என்பதாலும் இவரது மரணம் அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அண்ணன் அகிலேஷ் யாதவ் கட்சியின் தலைவராக இருக்கும் வேளையில், தம்பி பிரதீக்கின் இந்த அகால மரணம் யாதவ் குடும்பத்தினர் மற்றும் சமாஜ்வாதி கட்சியினர் மத்தியில் ஆழ்ந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 38 வயதிலேயே அவர் உயிரிழந்தது அனைவரையும் நிலைகுலையச் செய்துள்ளது.
முலாயம் சிங்கின் வாரிசுகளில் ஒருவரான பிரதீக்கின் மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் தங்களது இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர். லக்னோவில் உள்ள அவரது இல்லத்தில் தற்போது உறவினர்களும் தொண்டர்களும் திரண்டு வருவதால் அந்த இடமே சோகமயமாகக் காட்சி அளிக்கிறது.
