தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்காளம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் நடந்த சட்டசபை தேர்தலில், ஆண்கள் ஓட்டுப்போட்டதை விட பெண்கள் அதிக அளவில் ஆர்வத்துடன் வந்து வாக்களித்து புதிய வரலாறு படைத்துள்ளனர். தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள தகவலின்படி, மேற்கு வங்காளத்தில் 93.8 சதவீதப் பெண்களும், தமிழ்நாட்டில் 86.2 சதவீதப் பெண்களும் வாக்களித்து ஆண்களை விட முந்தியுள்ளனர்.

இதேபோல் கேரளா, புதுச்சேரி மற்றும் அசாம் மாநிலங்களிலும் பெண் வாக்காளர்களின் பங்களிப்பே அதிகமாக இருந்துள்ளது. பெண்கள் அதிக அளவில் ஜனநாயகக் கடமையை ஆற்றி இருந்தாலும், தேர்தலில் வெற்றி பெற்று எம்.எல்.ஏ.க்களாகத் தேர்வான பெண்களின் எண்ணிக்கை மிகக் குறைவாகவே உள்ளது.

உதாரணமாக, தமிழ்நாட்டில் 23 பெண்களும், மேற்கு வங்காளத்தில் 37 பேரும், கேரளாவில் வெறும் 11 பேரும் மட்டுமே வெற்றி பெற்றுள்ளனர். மேலும், இந்த தேர்தலில் தமிழ்நாடு மற்றும் கேரளாவில் போட்டியிட்ட இரண்டு மூன்றாம் பாலினத்தவர்களும் வெற்றி வாய்ப்பை இழந்து டெபாசிட் இழந்தது குறிப்பிடத்தக்கது.