தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி அருகே உள்ள பெருமாள்புரம் பகுதியை  சேர்ந்தவர் பிரபல யூடியூபர் ஜி.பி.முத்து. சமூக வலைதளங்கள் மூலம் புகழ்பெற்ற இவர், திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். இவரது வீட்டின் அருகே பழமையான அம்மன் கோவில்கள் அமைந்துள்ளன. இந்தக் கோவிலைப் புதுப்பிக்கும் பணிக்காகப் பழைய கட்டிடம் இடிக்கப்பட்டு, புதிய கட்டுமானப் பணிகள் நடைபெற்று வந்தன. இந்த நிலையில், புதிய கோவில் கட்டிடம் தனது வீட்டுக்கும், பொதுத் தெருவுக்கும் இடையூறு விளைவிக்கும் வகையில் கட்டப்படுவதாகக் கூறி, ஜி.பி.முத்து மாவட்ட ஆட்சியர் மற்றும் அதிகாரிகளிடம் மனு அளித்தார். இதன் விளைவாகக் கட்டுமானப் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன. இது தொடர்பாக நீதிமன்றத்திலும் வழக்கு நிலுவையில் உள்ளது.

இந்த மோதல் போக்கு நீடித்து வந்த நிலையில், நேற்று ஜி.பி.முத்து ஒரு வீடியோவை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது, “எனக்குச் சொந்தமான இடத்தில் அனுமதியின்றி சிலர் அத்துமீறி நுழைந்து தகராறு செய்தனர். அதனை நான் தட்டிக்கேட்டபோது, அந்த நபர்கள் என்னையும், எனது குடும்பத்தினரையும் கடுமையாகத் தாக்கினர். எனது மகள்களைக் குறித்து ஆபாசமாகப் பேசி எனக்கு மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளனர்.”

முகத்தில் ரத்தக் காயங்களுடன் கண்ணீர் மல்கப் பேசியுள்ள அந்த வீடியோவில், தன்னைத் தாக்கியவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப் போவதாக அவர் தெரிவித்துள்ளார். தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருவதால், உடன்குடி பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.